முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற பரிந்துரை

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா - சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என மத்திய உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டியுள்ள அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பிரபலமாக இருந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் கடந்த ஆண்டு திவாலானது. இதில் முதலீடு செய்திருந்த லட்சக்கணக்கான சாதாரண ஏழை மக்களின் 10 ஆயிரம் கோடி ரூபாய் சீட்டு பணம் ஸ்வாகா செய்யப்பட்டது. இது தொடர்பாக சிட்பண்ட் அதிபர், இயக்குநர்கள், ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர். மூத்த காங்கிரஸ் தலைவர் அப்துல் மன்னன் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சாரதா சிட்பண்ட் மோசடியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பாக தொடாந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் மம்தா அரசில் அமைச்சராக இருந்த மதன்மித்ராவை சிபிஐ கடந்த வாரம் கைது செய்தது. இதற்கு முன்பு திரிணாமுல் எம்பி ஒருவரும் கைது செய்யப்பட்டார். சிறையில் அவர் தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மதன்மித்ரா கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் உள்ள சிபிஐ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது திரிணாமுல் தொண்டர்கள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு போலீசார் இல்லை.
இதனால் சிபிஐ அதிகாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இதை தொடர்ந்து இந்த வழக்கை மேற்கு வங்கத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றலாமா என்பது குறித்து சிபிஐ யோசித்து வருகிறது. இது குறித்து சிபிஐ இயக்குநர் ராஜீவ்சிங்கிடம் சாரதா வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி கரண் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் மத்திய உளவுத்துறையின் பிரிவு அலுவலகமும் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. சாரதா வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. சாரதா வழக்கை சிபிஐக்கு மாற்ற முயற்சிகள் எடுத்த காங்கிரஸ் தலைவர் அப்துல் மன்னனும் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து