முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பைஸ் ஜெட்விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் அவதி

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப ஆயில் நிறுவனங்கள் மறுத்து விட்டன. இதனால் நேற்று காலை முதல் இந்த விமானங்கள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதாவது விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
.
இதனால் விமான டிக்கெட் எடுத்த ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை உள்பட பல்வேறு விமான நிலையங்களில் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் விமானம் என்ற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கி வந்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அண்மைக் காலமாக கடனில் சிக்கி தவிக்கிறதாம். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிய வகையில் ஆயில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 600 கோடி செலுத்த வேண்டியது உள்ளதாம். இது தவிர டிசம்பர் 10 வரை விமான நிலையங்களுக்கு  ரூ. 173 கோடி பாக்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை ஆயில் நிறுவனங்கள் ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப  மறுத்து விட்டன.இதனால் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. டிக்கெட் எடுத்தப் பயணிகள்  சென்னை, மும்பை உள்பட பல்வேறு விமான நிலையங்களில்  காத்திருக்கிறார்கள். சன் நெட்வொர்க்கின் தலைவரும் ஊடக அதிபருமான கலாநிதி மாறனுக்கே இந்த விமான நிறுவனத்தில் அதிக பங்குகள் உள்ளன.
நிதிச் சிக்கலில் இருந்து மீள வேண்டுமானால் சுமார் ரூ. 2000 கோடி முதலீடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசிடம் சலுகை கேட்டு ஸ்பைஸ் ஜெட் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர், சன் குரூப் தலைமை  செயல்அதிகாரி எல். நாராயணன் ஆகியோர் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு மற்றும் விமான நிலையங்களின்  ஆணையர் பிரபாத் குமாரை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு வங்கிகள் அல்லது நிதிநிறுவனங்கள் வாயிலாக ரூ. 600 கோடி கடன் பெறுவதற்கு முடிவெடுக்கப்பட்டது..
இதனிடையே 15 நாட்களுக்கு கடனுக்கு பெட்ரோல் நிரப்ப ஆயில் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூர் தொழிலதிபர் விஜய மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் விமானங்கள் கடந்த ஆண்டு இதே போல் கடன்  சுமையால் மூடப்பட்டது. அதே போன்ற நிலைமை இந்த விமான நிறுவனத்திற்கும் ஏற்பட்டு விடக் கூடாது  என்பதால் இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு  பெட்ரோல் நிரப்புமாறு ஆயில் நிறுவனங்களை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கொடுத்த பணத்தை திருப்பி தருமாறும் அவர்கள் விமான ஊழியர்களிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து