முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திகார் சிறையை தகர்க்க பாக். தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - டெல்லியில் உள்ள மத்திய சிறைச்சாலையான திகார் சிறை தெற்காசியாவிலேயே மிகப் பெரியதாகும். இந்த சிறையில் சுமார் 7 ஆயிரம் கைதிகளை வைக்கவே வசதி உள்ளது. ஆனால் தற்போது சுமார் 13 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய வழக்குகளில் சிக்கும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் திகார் சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா இப்போது இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரபலங்கள் தவிர நாடெங்கும் பிடிபடும் தீ விரவாதிகளும் டெல்லி திகார் ஜெயிலில்தான் அடைக்கப்பட்டுகிறார்கள். தீவிரவாதிகளை அடைத்து வைத்திருப்பதற்காக திகார் சிறை வளாகத்தில் தனிப்பகுதி உள்ளது. அங்கு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இந்தியன் முஜாகிதீன் மற்றும் சிமி தீவிரவாதிகளும் ஏராளமானோர் திகார் சிறைக்குள் உள்ளனர். அவர்களை வெளியில் விட்டால் நிச்சயம் மீண்டும் நாசவேலை முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்பதால் அவர்களை நிரந்தரமாக அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பலர் பட்டியலில் உள்ளனர். இதில் வெடிகுண்டு தயாரிக்கும் தீவிரவாதிகளும் அடங்குவார்கள். அவர்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்பது லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் திட்டமாகும். இதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தீவிரவாதிகளின் பேச்சை இடைமறித்து கேட்ட உளவுத்துறையினர் டெல்லி திகார் சிறையை தற்கொலை தாக்குதல் நடத்தி தகர்த்து விட்டு தங்கள் கூட்டாளிகளை மீட்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை அறிந்தனர். திகார் சிறையின் எந்த பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும்? அந்த சமயத்தில் கூட்டாளிகளை எப்படி மீட்க வேண்டும் என்று அவர்கள் சங்கேத வார்த்தைகள் மூலம் தகவல்களை பரிமாறி கொண்டதும் தெரியவந்தது. இந்த தாக்குதலுக்காக லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தனிப்படை ஒன்றை உருவாக்கி பயிற்சி அளித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திகார் சிறை பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி மத்திய உள்துறையை உளவுத்துறை கேட்டுக் கொண்டது. அதன்படி நேற்று முதல் திகார் சிறையில் கூ டுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே திகார் சிறைக்கு மத்திய ரிசர்வ் போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். சிறையின் ஒரு பகுதி பாதுகாப்பை தமிழ்நாடு போலீசார் ஏற்றுள்ளனர். தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து திகார் சிறையை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையை இணைக்கும் அந்த பாதைகளிலும் ரகசிய காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. திகார் சிறை டிஐஜி முகேஷ் பிரசாத் கூ றுகையில், சிறையை நெருங்கும் வாகனங்கள், தனி நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். சிறைக்கு வெளியே பல தடுப்புகள் அமைத்து சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றார். திகார் சிறை கைதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கிழக்கு டெல்லியில் உள்ள மண்டோலி, நரோலா, பாப்ரோலா பகுதிகளில் திகார் சிறையி்ன் கிளைகள் ரூ. 169 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. அந்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து