முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதவெறியை தூண்டும் வகையில் மோடி அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு.

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பின்பு முதலாவது மாநில செயற்குழு கூட்டம் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இளங்கோவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சிப்பணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து அரசியல் களம் காண வேண்டிய பொறுப்பும் கடமையும் காங்கிரசுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் அரசியல் வியூகங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

* மத்திய அரசின் இந்தி, சமஸ்கிருதம் திணிப்பை வன்மையாக கண்டிக்கிறோம்.

* காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சுய உதவி குழுக்கள் திட்டம் உள்ளிட்டவற்றை முடக்குவதை கைவிட வேண்டும்.

* மானிய விலையில் மண்எண்ணெய் வழங்குவதை ரத்து செய்யும் முடிவை கைவிடவேண்டும்.

* பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் 40 சதவீதம் குறைந்துள்ளது. அதே அளவு இந்தியாவிலும் குறைக்க வேண்டும்.

* காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.

* நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பயன்பெறும் தாமிரபரணி–கருமேனி, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய நதிகள் இணைப்பு திட்டத்தில் 2009–ல் ரூ.369 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.213 கோடி செலவழிக்கப்பட்ட பின்னர் அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. உரிய நிதி ஒதுக்கி அந்த திட்டத்தை தொடர வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக முகுல் வாஸ்னிக் நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த சில மாதங்களாக மத்திய மோடி அரசு மதவெறியை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி திட்டங்களை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்தவர்கள் மதவாதத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. அது தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும்.

காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறியதும் கட்சி மேலிடத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கு கட்சி மேலிடம் உரிய முக்கியத்துவமும், மரியாதையும் கொடுத்து வந்தது. தமிழக காங்கிரசுக்கும் டெல்லி காங்கிரசுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு தொடர்ந்து இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மோடியின் அந்தர்பல்டி அரசாங்கம் என்ற புத்தகம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அகில இந்திய செயலாளர்கள் செல்லக்குமார், திருநாவுக்கரசர், ஜெயக்குமார், பிரபு, தங்கபாலு, கார்த்தி ப.சிதம்பரம், ஜெ.எம்.ஆரூண், கோபண்ணா, தாமோதரன், சிரஞ்சீவி மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, நிர்வாகிகள் நாஞ்சில் பிரசாத், நவாஸ், எஸ்.எம்.குமார், ஆதிஜான்சன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து