முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதமாற்ற விவகாரம்: பாராளுமன்ற இரு சபைகளிலும் அமளி

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - கட்டாய மதமாற்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் இது தொடர்பாக இரு சபைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராஜ்யசபையில் காங்கிரசார் போர்க்கொடி உயர்த்தினார்கள். ஆனால் பிரதமர் ஓடி ஒளிகிறார் என்று ஆனந்த் சர்மா குற்றம் சாட்டினார். மேலும் பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா ராஜ்யசபையில் எச்சரித்தார். இதனால் ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தை அடுத்து ராஜ்யசபை 2 முறைக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபையிலும் இதே நிலை நீடித்தது. இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, மதமாற்ற விவகாரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று அவரும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இரு சபைகளிலுமே கூச்சல், குழப்பம் நீடித்தது.
கடந்த சில நாட்களாகவே கட்டாய மதமாற்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் புயலைக் கிளப்பி வருகின்றன. இந்நிலையில், நேற்றும் இதே விவகாரத்தால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. உணவு இடைவேளைக்கு முன்னர் ராஜ்யசபை இதே காரணத்துக்காக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபையில் சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபையில் பேசிய முலாயம் சிங் யாதவ், "தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடி தவறிவிட்டார்" என்றார்.
முன்னதாக முலாயம் சிங் யாதவ் பேச அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிர்கட்சியினர் ஒன்றாக திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து முலாயம் சிங் யாதவ் பேச மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி வழங்கினார்.
முலாயம் சிங் யாதவ் தொடர்ந்து பேசுகையில், "தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடி தவறிவிட்டார். விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குளில் அரசாங்கத்திடமிருந்து ஊக்கத்தொகையை பெறுவர், சீனா, பாகிஸ்தான் நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படும் என பாஜக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. ஏதாவது ஒரே ஒரு வாக்குறுதியையாவது சொன்னது மாதிரி நிறைவேற்ற வேண்டும் என பாஜகவை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
ராஜ்யசபையில் பேசிய ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், "பாஜக தேர்தலுக்கு முன்னர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மாறாக 'கர் வாப்ஸி' என்ற பெயரில் வாக்குறுதியில் சொல்லப்படாத மதமாற்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக பாஜக மறந்துவிட்டது. அதனாலேயே அவை நடவடிக்கைகள் முடங்கிக்கிடக்கின்றன" என்று குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து