முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசர சட்டங்களை மசோதாவாக நிறைவேற்ற முடிவு

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மத்திய அரசு அவசர சட்டங்களை நிறைவேற்றி வருவதை ஜனாதிபதி கண்டித்துள்ளதையடுத்து அவற்றை பட்ஜெட் கூட்டத் தொடரில் மசோதாவாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது இந்து அமைப்புகளின் கட்டாய மதமாற்ற விவகாரம், மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சை பேச்சு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் எதிர் கட்சியினர் எழுப்பி அவை அலுவல்களை முற்றிலுமாக முடக்கினர். இதனால் மத்திய அரசு திட்டமிட்டிருந்த பல்வேறு மசோதாக்களையும் நிறைவேற்ற இயலாத நிலை ஏற்பட்டது.

மேலும் ராஜ்யசபாவில் பாஜவுக்கு பேதிய பலம் இல்லாத காரணத்தாலும் மசோதாவுக்கு உரிய ஆதரவை பெற முடியாத நிலை உள்ளது. எனவே, கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் மத்திய அமைச்சரவையை கூட்டி 9 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டது. அவசர சட்டங்களை 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து மசோதாவாக நிறைவேற்ற வேண்டும்.

இந்நிலையில் குடியரசு தின உரையின் போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மத்திய அரசின் அவசர சட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தார். அவசர சட்டங்களால் ஜனநாயக நெறிமுறைகள் பாதிக்கப்படும் என்று உரையில் சுட்டிக்காட்டினார்.

மேலும் நாடாளுமன்ற அலுவல்களை பாதிக்கும்படி எதிர்க் கட்சிகள் நடந்து கொள்ளக் கூடாது என்றும் கண்டித்தார். இதனால் 9 அவசர சட்டங்கள் மற்றும் பல்வேறு சட்ட திருத்தங்களை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில்  மசோதாவாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வருகிற வாரத்தில் அனைத்து அமைச்சகங்களின் செயலாளர் மட்டத்திலான உயர் மட்ட கூட்டத்தை வெங்கைய்யா நாயுடு கூட்டுகிறார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அவசர சட்ட ஆணைகள் அனைத்தையும் மசோதாவாக தயாரிப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் வெங்கைய்யா நாயுடு உத்தரவிட்டுள்ளார் என்றார். இவற்றில் குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு, காப்பீட்டு துறையில் அன்னிய முதலீடு, நிலக்கரி சுரங்க ஆன்லைன் ஏலத்திற்கான அனுமதி, நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கியமான சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து