முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த பட அதிபர் ராமாநாயுடு உடல் ஐதராபாத்தில் அடக்கம்

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

நகரி - பட அதிபர் ராமாநாயுடு உடலுக்கு நடிகர், நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில்  150 படங்களுக்கு மேல் தயாரித்தவர் 78 வயதான ராமாநாயுடு. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு அவர் வீட்டில் மரணமடைந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டார். சுரேஷ், வெங்கடேஷ் என்ற மகன்களும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் பட தயாரிப்பாளராகவும், வெங்கடேஷ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் உள்ளார். லட்சுமி நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து பிரிந்து வாழ்கிறார். இவர்களது மகன் நாகசைத்தன்யா தற்போது இளம் நடிகராக சினிமாவில் வலம் வருகிறார். இதே போல் சுரேசின் மகன் ராணாவும் முன்னணி நடிகராக உள்ளார்.

ஐதராபாத் பிலிம்சிட்டியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த ராமாநாயுடு உடலுக்கு ஏராளமான நடிகர், நடிகைகள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி, என்.டி. ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி, நடிகர்கள் நாகார்ஜூனா, ராஜசேகர், பிரகாஷ்ராஜ், தருண், என்.டி.ஆர். ஹரிகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர் கல்யாண்ராம், அல்லு அரவிந்த், அல்லு அர்ஜூன், சாய்குமார், ரவிதேஜா, பழம்பெரும் நடிகர் ராஜேந்திர பிரசாத், நடிகைகள் கே.ஆர். விஜயா, ஜமுனா, சாரதா, வாணிஸ்ரீ, சவுகார் ஜானகி மற்றும் ஏராளமான டைரக்டர்கள், இசை அமைப்பாளர்கள், சினிமா கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், என்.டி.ஆர். மனைவி லட்சுமி சிவபார்வதி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ். தாணு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகை ஜெயப்பிரதா, கணவர் கிருஷ்ணாவுடன் வந்த விஜய நிர்மலா ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பின்னர் ராமாநாயுடு உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஐதராபாத் ஜூப்ளி ஹில்சில் உள்ள அவருக்கு சொந்தமான ராமாநாயுடு ஸ்டூடியோவில் வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள். ராமாநாயுடு உடலுக்கு அஞ்சலி செலுத்த மந்திரிகள், நடிகர், நடிகைகள் என பிரபலங்கள் அனைவரும் ஐதராபாத்தில் திரண்டனர். அவரது சொந்த மாவட்டத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பஸ்களில் மக்கள் வந்திருந்தனர். ராமாநாயுடு ஸ்டூடியோ முன்பு கூட்டம் திரண்டது.

பிற்பகல் 3 மணிக்கு இறுதி சடங்கு நடந்தது. ஸ்டூடியோ வளாகத்திலேயே ராமாநாயுடு உடல்  அடக்கம் செய்யப்பட்டது. இதில் தெலுங்கு திரையுலகினர் கலந்து கொண்டனர். ராமாநாயுடு மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. திரையரங்குகளும் மூடப்பட்டு இருந்தன. ராமாநாயுடு மறைவுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவி்த்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து