முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கெடுப்பில் பங்கேற்காத பா.ஜ. எம்பிக்களுக்கு கண்டனம்

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - மாநிலங்கள் அவையில் குடியரசு தலைவர் உரையில் எதிர்கட்சிகள் கொண்டுவந்த திருத்தத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜ படுதோல்வி அடைந்தது. இது மத்திய அரசுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த வாக்கெடுப்பின் போது அவைக்கு வராத பாஜ மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது. ஜனாதிபதி உரைக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிப்பது மரபு. இந்நிலையில் மாநிலங்கள் அவையில் ஜனாதிபதி உரைக்கு ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி ஜனாதிபதி உரையில் கருப்பு பணம் குறித்து ஒரு திருத்தம் கொண்டு வந்தார்.

இதற்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த திருத்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனை அவை தலைவர் அன்சாரி ஏற்றுக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தினார். எதிர்க் கட்சிகல் கொண்டு வந்த திருத்தத்துக்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் கிடைத்தன. இதை தொடர்ந்து எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த திருத்தம் ஜனாதிபதி உரையில் சேர்க்கப்பட்டது.

இது மத்திய அரசுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. வாக்கெடுப்புக்கு ஆதரவாக காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்களித்தன. வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது.

வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் 10க்கும் மேற்பட்ட பாஜ எம்பிக்களும், அதன் தோழமை கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்களும் அவையில் இல்லை, முக்கியமான சமயத்தில் எம் பிக்கள் அவையில் இல்லாதது பிரதமர் மோடியை எரிச்சல் அடைய செய்துள்ளது. அவைக்கு வராத பாஜ மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு மோடி கண்டனம் தெரிவித்ததுடன், அவைக்கு வராதது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து