முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகர வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.500 கோடி

புதன்கிழமை, 25 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - விரைவான நகரமயமாதலால், மாறி வரும் மக்கள் தொகை பரவலுக்கு ஏற்ப நகர்ப்புறக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது பெரும் சவாலாக உள்ளது. இச்சவாலை சமாளிக்க, கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மாநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டங்களின் கீழ் 1,434.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1,084 குடிநீர் வழங்கல் திட்டங்களும், 862.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 74 பாதாளச் சாக்கடைத் திட்டங்களும் 1,929.16 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3,304 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2015–16ம் ஆண்டில் சென்னை மாநகர வளர்ச்சித் திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்திற்கு 750 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்திற்காக 2015–16ம் ஆண்டிற்கு 420.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளையும் திறன்மிகு நகரங்கள் திட்டத்தில் சேர்ப்பதற்கான மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி, இந்த அரசு 2015–16ம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில், 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள அனைத்து நகரங்களிலும் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள தேசிய நகர்ப்புற வளர்ச்சி இயக்கத்திற்காக 2015–16ம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரிய நகரங்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், காஞ்சீபுரத்தையும், வேளாங்கண்ணியையும் சேர்த்துள்ளமைக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாரம்பரிய நகர மேலாண்மைத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காக, இந்த வரவு – செலவுத் திட்டத்தில் 46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2,212.89 கோடி ரூபாய் மொத்த தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புற கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியில், 1,101.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள பெரும் மழைநீர் வடிகால் பணியும் இத்திட்டத்தில் அடங்கும். 2015–16ம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 152 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து