முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியின் குறுக்கே அணை: சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று கூடுதல் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த திட்டத்தை கைவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி  அதில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

குறிப்பாக, காவிரி நீர் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை போன்றவற்றில் அவருக்கு தொடர்ச்சியாக வெற்றி மேல் வெற்றி கிடைத்துள்ளது. ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால்தான் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. இது தனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்வுக்கு கிடைத்த வெற்றி என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அடுத்து முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் விஷயத்திலும் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதி கிடைத்தது. இந்த அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் சில மாதங்களுக்கு 142 அடியாக உயர்த்தப்பட்டு அதற்காக ஜெயலலிதாவுக்கு ஒரு பிரம்மாண்ட பாராட்டு விழாவே நடந்தது நினைவிருக்கலாம்.
 
இந்த நிலையில் காவிரியின்  குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணைகளை கட்ட முயன்று வருகிறது. இதற்காக அந்த மாநில பட்ஜெட்டில் ரூ. 25 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நாளை கூட முழு அடைப்புக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் நேற்று கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயலும் கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காவிரியின் குறுக்கே அணை கட்ட நடுவர் நீதிமன்றம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். காரணம், இது நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு விரோதமானது. கர்நாடகம் இந்த அணை கட்ட முயல்வதை ஏற்று கொள்ள முடியாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியமோ, ஒழுங்கு முறை குழுவோ இன்னமும் அமைக்கப்படவில்லை. கர்நாடகம் தடுப்பணை கட்டுவது பற்றி தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்கவும் இல்லை.

எனவே அதன் முயற்சி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. ஆகவே காவிரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கைவிடுமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கூடுதல் பிரமாண பத்திரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மாநில முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வமும் இந்த திட்டத்தை செயல்படுத்த விட  மாட்டோம்என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து