முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி: அமைச்சர்கள் துவக்கினர்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

மகளிர் மேளா கோடைக் கொண்டாட்டம் 2015 மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சியினை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, கோகுலஇந்திரா ஆகியோர் தொடங்கிவைத்து பர்வையிட்டனர்.

சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை தெரசா  மகளிர் வளாகத்தில்  ‘‘மகளிர் மேளா  கோடைக் கொண்டாட்டம் – 2015″ விற்பனைக்  கண்காட்சியை அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, எஸ்.கோகுல இந்திரா  துவக்கி வைத்தனர். கண்காட்சி ஒரு மாதம்  நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் நோக்கிலும், விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடும் வகையிலும் சென்னையில் மாநில அளவில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் விற்பனை கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  மகளிர் மேளா கோடைக் கொண்டாட்டம் 2015″ விற்பனை கண்காட்சி இன்று காலை  துவங்கியது. அடுத்த மாதம் 17–ந்தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இக்கண்காட்சியில் விற்பனை காலை 10.30 மணிக்கு முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
விற்பனைக் கண்காட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறைத்துறை, சுனாமிக்குப் பிந்தைய நிலைத்த வாழ்வாதார திட்ட சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டு தாங்கள் உற்பத்தி செய்த பல்வேறு வகையான பொருட்களை விற்பனைச் செய்கின்றனர்.
மேலும் இக்கண்காட்சியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் பொருட்கள், கோடைக்காலத்திற்கு ஏற்ற கைத்தறி புடவைகள், பனியன்கள் மற்றும்  ஆயத்த ஆடை வகைகள், பெட்ஷீட்கள்,  ஜமுக்காளங்கள், தரை விரிப்புகள், கொல்லிமலை மூலிகைப் பொருட்கள், அழகிய கைவண்ணம் மிக்க செயற்கை ஆபரணங்கள், பல்வேறு வகை மணிமாலைகள்,  தானியத்தில் உருவான ஆபரணங்கள், கோப்புகள் மற்றும் மணி மாலைகள், களிமண்,  கல், மரம், பீங்கான், உலோகம், தேங்காய் நார் மற்றும் பேப்பரில் உருவான அழகிய கைவினைப் பொருட்கள்,  சிற்பங்கள்,பித்தளை குத்து விளக்குகள், தஞ்சாவூர் ஓவியங்கள், குழந்தைகளின் மனம் கவரும் விளையாட்டுப் பொருட்கள், மூங்கில் மற்றும் பனை ஓலையால் பின்னப்பட்ட பொருட்கள், மரம் மற்றும் மூங்கில் ஊஞ்சல்கள், மங்கையருக்கான கைப்பைகள், புகழ் பெற்ற பத்தமடைப் பாய் வகைகள், தோல் பொருட்கள்,  இரும்பு மற்றும் கல்லில் வடிக்கப்பட்ட அம்மிக்கல், உரல் மற்றும் பல்வேறு வித பொருட்கள், மிதியடி வகைகள், மதுரை மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற ஜிகிர்தண்டா, கற்றாலைப் பொருட்கள், சிறு தானியங்கள், நீலகிரி தைலம்,தேயிலை, ஏலக்காய், பேக்கரி பொருட்கள், சாக்லேட், ஊறுகாய், தேன், புளி, சோப்பு, முந்திரிப் பருப்பு வகைகள்,  சுவையும் சத்தும் மிகுந்த செட்டிநாட்டு கிராமிய உணவுப் பொருட்கள், அலங்கார மெழுகுவர்த்திகள் என பல்வேறு பொருட்கள் தரமாக தயாரிக்கப்பட்டு நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பொதுமக்களின் ஆதரவோடு குறிப்பாக பெண்களின் பேராதரவோடு தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனைச் செய்து வருகின்றனர். மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை  பொதுமக்கள் வாங்குவதினால் மகளிரின் வாழ்வாதாரம் உயர்ந்து, பொருளாதாரம் மேம்பாடு அடைவது மட்டுமின்றி தங்களின் ஒவ்வொரு காசுக்கும் உரிய மதிப்பிலான பொருட்களை பெறுகிறீர்கள். எனவே, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மகளிர் மேளா கோடைக் கொண்டாட்டம் 2015’’ கண்காட்சிக்கு வருகை புரிந்து பொருட்களை வாங்கி  பயன் பெற  வேண்டும் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்   வே.அமுதவல்லி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து