முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 4 குழந்தைகள் உள்பட 550 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் சிக்கித் தவித்த 550 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.  நேபாளத்தில் நேற்று முன்தினம் காலை 11.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து மளமளவென சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1,896 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 4, 721 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் இதுவரை சுமார் 550 பேரை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டு டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 4 விமானப்படை விமானங்கள் நேபாளத்தில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 546 பேருடன் டெல்லியில் தரையிறங்கியுள்ளன. முதலாவதாக தரையிறங்கிய விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 55 பேர் இருந்தனர்.

நள்ளிரவில் தரையிறங்கிய விமானத்தில் 102 பேரும், அதன் பிறகு தரையிறங்கிய விமானத்தில் 152 பேரும் இருந்தனர். மேலும் நேற்று அதிகாலை 4 மணிக்கு வந்த விமானத்தில் 237 பேர் இருந்தனர் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து விமானப்படை தளபதி அருப் ராஹா கூறுகையில், இந்திய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

நேற்று நேபாளத்திற்கு 10 விமானங்கள், 12 ஹெலிகாப்டர்களை அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். மீட்பு பணிக்கு தேவையானவற்றை அந்த விமானங்களில் அனுப்பி வைக்க உள்ளோம்.  பொருட்களை அங்கு அளித்து விட்டு நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் அந்த விமானங்கள் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட உள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடக்கும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து