முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு விழா மங்கலதேவி மலையில் மலைபோல் குவிந்த பக்தர்கள்

திங்கட்கிழமை, 4 மே 2015      தமிழகம்
Image Unavailable

கூடலூர்: மங்கலதேவி மலையில் உள்ள சரித்திர புகழ்பெற்ற கண்ணகி கோயிலில் நேற்று சித்திரை முழு நிலவு விழா முப்பெரும் விழாவாக நடந்தது. இரண்டாயிரம் ஆண்டு பழமையும், சரித்திரப்புகழும் வாய்ந்த கண்ணகி கோயில், தேனி மாவட்டம், கூடலூருக்கு தெற்கேயுள்ள வண்ணாத்திப்பாறையில் தமிழக - கேரள எல்லைப் பகுதியான மங்கலதேவி மலையில் புலிகள் சரணாலய பகுதியில் 4,830 அடி உயரத்தில் உள்ள இக்கோயிலில்  நேற்று சித்திரை முழு நிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, புமாரிவிழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது.

அதிகாலை 6 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பளியன்குடி வழியாக நடைப்பயணமாக மலை உச்சியிலுள்ள கண்ணகி கோயிலுக்கு வந்தவண்ணம் இருந்தனர். நடைப்பயண பக்தர்களின் வசதிக்காக கம்பத்திலிருந்து கம்பம் - கூடலூர் வழியாக பளியன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குமுளியிலிருந்து ஜீப்களில் கோயில் செல்ல பக்தர்களிடம் ரூ.75, திரும்பி வர ரூ.75 என கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு முறையான வாகன வசதி ஏற்பாடு செய்யாததால் குமுளி பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்து கிடந்தனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இக்கோயில் இருப்பதால், கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இருமாநில அரசுகள் கடும் கட்டுப்பாடு விதித்தன.

புகையிலை, சிகரட் போன்ற போதை வஸ்துக்களும், பிளாஸ்டிக் பைகளும், தண்ணீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கொக்க ரக் கண்டம் பகுதியில் கேரள வனத்துறை மற்றும் போலீசார் ஆண் - பெண் பக்தர்களை மெட்டல் டிடெக்டர் சோதனைக் குப் பிறகே கோயிலுக்குள் அனுமதித்தனர். காலை 5 முதல் 10 மணி வரை பள்ளி உணர்த்தல், யாகபூஜை, மங்கள இசை, பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 10 முதல் 12 மணி வரை பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பகல் 12 முதல் பிற்பகல் 2.30 மணி வரை மணிமேகலையின் அமுதசுரபியில் உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

மாலை 5 முதல் 6 மணி வரை பூமாரி விழாவோடு சித்திரை முழு நிலவு விழா நிறை பெற்றது. வெளி மாவட்ட பக்தர்களின் வருகையை தொடர்ந்து சென்னை, திருச்சி, பாண்டிச்சேரியிலிருந்து கம்பத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து