முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார் : பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்

புதன்கிழமை, 6 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மதுரை தல்லாகுளத்தில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலையை நோக்கி புறப்பட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். முந்தைய காலங்களில் வெவ்வேறு மாதங்களில் நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையும், அழகர் கோவில் சித்திரை திருவிழாவையும் சைவ, வைணவ மதத்தின் ஒற்றுமைக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் இந்த 2 விழாக்களையும் ஒரே மாதத்தில் அதாவது சித்திரை மாதத்தில் நடத்த அப்போது மன்னராக இருந்த திருமலை நாயக்கர் முடிவு செய்தார்.

அதன்படி இந்த 2 கோவில்களின் சித்திரை திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சோழவந்தானை அடுத்த தேனூரில் உள்ள வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் தல்லாகுளம் வழியாக தற்போது கோரிப்பாளையம் அருகே உள்ள வைகை ஆற்றில் இறங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து அழகர்கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. அழகர்கோவில் மலையில் இருந்து அதிர்வேட்டுகள் முழங்க புறப்பட்ட கள்ளழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் திருவிழாவாக கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசித்தனர்.

இதனை தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் வண்டியூர் நோக்கி புறப்பட்டார். வழியில் ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு கள்ளழகரின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அழகரின் வெப்பத்தை தணிக்கும் வகையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் வழியில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு சென்று தங்கினார். கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து மாலையில் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் மற்றும் நாரைக்கு முக்தியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. புராண காலத்தில் சதபஸ் முனிவர், வைகை ஆற்றில் குளித்த போது துர்வாசரின் சாபத்துக்கு ஆளாகி மண்டூகம் ஆனாராம். அவருக்கு சாப விமோசனம் அளிக்கவே, வைகை ஆற்றில் கள்ளழகர் கோலத்தில், சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்வதாக ஐதீகம்.
இந்த பூஜைகள் முடிந்த பிறகு தேனூர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு வண்டியூர் அனுமார் கோவிலை வந்தடைந்தார். அங்கு பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளியவாறு, மதிச்சியத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு நேற்று முன்தினம் இரவு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10 அவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், கிருஷ்ண அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரங்களில் காட்சி அளித்தார் கள்ளழகர். மோகினி அவதாரத்தில் அதிகாலை காட்சி அளித்தார். அப்போது திரளான பக்தர்கள் ராமராயர் மண்டகப்படியில் குவிந்து தரிசனம் செய்தனர்.இதனை தொடர்ந்து நேற்று மாலை ராமராயர் மண்டகப்படியில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி ஆழ்வார்புரம், மூங்கில்கடைவீதி வழியாக தல்லாகுளம் வந்து நேற்று இரவு சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி கருப்பணசுவாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனதும் மலையை நோக்கி புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அங்கிருந்து தமுக்கம் மைதானம் எதிரே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் வழியாக அழகர் சென்று பாண்டியன் ஓட்டல் பின்புறம் புதுநத்தம் ரோடு வழியாக ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலை அடைந்தார்.

அங்கிருந்து இன்று பிற்பகல் புறப்பாடாகி டி.ஆர்.ஓ. காலனி, புதூர், மூன்றுமாவடி வழியாக சுந்தராஜன்பட்டி சென்றடைந்து அங்குள்ள மறவர் மண்டகப்படியில் இன்று இரவு சென்றடைகிறார். நாளை 8ம் தேதி அதிகாலையில் திருமஞ்சனமாகி கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். அப்பன்திருப்பதி வழியாக கள்ளழகர் புறப்பாடாகி காலை 9 மணியளவில் கோவிலை சென்றடைகிறார். நாளை மறுநாள் 9ம் தேதி அழகருக்கு அங்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் அழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து