முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: நியூலாந்தை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      விளையாட்டு
Image Unavailable

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை, இங்கிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெற்றி பெற 345 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-ம் நாள் களமிறங்கிய நியூஸிலாந்து, ஸ்டூவர்ட் பிராட் (3/50), பென் ஸ்டோக்ஸ் (3/38) ஆகியோரது அபார பந்து வீச்சிலும் இங்கிலாந்து கொடுத்த நெருக்கடியினாலும் 67.3 ஓவர்களில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது.

முதல் இன்னிங்சில் 30/4 என்று இருந்த இங்கிலாந்தை பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடி 92 ரன்களாலும் ஜோ ரூட், பட்லர், மொயீன் அலி ஆகியோரது அருமையான அரைசதங்களாலும் 389 ரன்களை எட்ட பங்களிப்பு செய்தனர்.  தொடர்ந்து நியூஸிலாந்து அணி கேன் வில்லியம்சனின் சதம் உட்பட கப்தில், லாதம், டெய்லர், மெக்கல்லம், வாட்லிங் ஆகியோரது பங்களிப்பினால் 523 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அலிஸ்டைர் குக் (162), ஜோ ரூட் (84) ஸ்டோக்ஸின் அதிரடி 85 பந்து சதம் ஆகியவற்றினால் 478 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 345 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிய நியூஸிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இலக்கைத் துரத்த அல்லாமல் டிரா நோக்கி ஆட களமிறங்கிய நியூஸிலாந்து ஆண்டர்சன், பிராட் ஆகியோரது அபாரமான தொடக்கப் பந்து வீச்சில் 12/3 என்று தடுமாறத் தொடங்கியது. ஆனால் போட்டியை இங்கிலாந்து பக்கம் பென் ஸ்டோக்ஸ் தனது பேட்டிங் மூலம் திருப்பியது போல் பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார், அதுவும் முதல் இன்னிங்சில் சதம் அடித்த கேன் வில்லியம்சன், மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்தார் பென் ஸ்டோக்ஸ். குறிப்பாக மெக்கல்லம் எதிர்கொண்ட முதல் பந்து நல்ல வேகத்துடன் நன்றாக உள்ளே வர மெக்கல்லம் விளையாட இடம் இல்லை. மெக்கல்லத்தின் தொடை பேடில் பட்டு, மட்டையில் பட்டு ஸ்டம்பில் விழுந்தது. பவுல்டு ஆனார் மெக்கல்லம். நியூஸிலாந்து 61/5 என்று ஆனது.

கோரி ஆண்டர்சன் இறங்கி எதிர்த்தாக்குதல் நடத்தினார், ஒரு முனையில் வாட்லிங் அவருக்கு ஸ்டாண்ட் கொடுத்தார். இருவரும் அரைசதம் எடுக்க 107 ரன்களை 6-வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர். இந்த நிலையில் ஆட்டத்தில் மீதம் 26 ஓவர்கள் இருந்தன.  அப்போது அருமையான ஒரு பவுலிங் மாற்றத்தை கொண்டு வந்தார் அலிஸ்டைர் குக், மார்க் உட் என்ற உயரமான வேகப்பந்து வீச்சாளரை பந்து வீச அழைக்க அருமையான எகிறு பந்து வாட்லிங்கின் கிளவ்வை உரசிச் சென்று விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. 3 ஓவர்களுக்குப் பிறகு ஜோ ரூட், கோரி ஆண்டர்சன் விக்கெட்டை எல்.பி. முறையில் வீழ்த்தினார்.

மார்க் கிரெய்க் விக்கெட்டை ஸ்டோக்ஸ் வீழ்த்தினார். சவுதீயை அருமையான கேட்ச் மூலம் தனது பந்துவீச்சிலேயே வீழ்த்தினார் மொயீன் அலி. மேட் ஹென்றி, டிரெண்ட் போல்ட் இறங்கி 8 ஓவர்களே தாக்குப் பிடிக்க முடிந்தது. கடைசியில் போல்ட் 10 ரன்களில் மொயீன் அலியின் அபாரமான மற்றொரு கேட்சிற்கு அவுட் ஆக, இங்கிலாந்து வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து