முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் அமைந்துள்ள பா.ஜனதாவின் ஓராண்டு ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே.வாசன் அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது மக்களைச் சந்தித்த மோடி இந்தியாவில் மிகப் பெரிய மாற்றம் கொண்டு வருவேன் என கூறி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு ஆரம்பம் முதலே மாற்றத்திற்கு பதிலாக ஏமாற்றத்தையே மக்களுக்கு அளித்திருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 12 மாதங்களில் 11 அவசரச் சட்டங்களை கொண்டுவந்து ஜனநாயக மரபை கடைப்பிடிக்கத் தவறியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவருவோம் என்று கூறிய மத்திய அரசு அதற்கான ஆக்கப்பூர்வமான, வேகமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டுவந்து விவசாயிகளுக்கு எதிராகவும், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட முயற்சிக்கிறார்கள்.

விலைவாசியை குறைப்போம் என்று கூறிவிட்டு அதற்கு நேர்மாறாக பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி, கலால் வரியையும் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியிருக்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு எதிராக மதவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். காஷ்மீரில் அரசியல் லாபத்திற்காகவும், கூட்டணிக்காகவும் பிரிவினைவாதிகள் தலைதூக்கியிருப்பதை மத்திய பா.ஜ.க அரசு வேடிக்கைப்பார்க்கிறது. மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் பல மாநிலங்களில் தலை தூக்கியிருப்பதை ஒடுக்குவதற்கு மாநில அரசோடு இணைந்து செயல்பட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட வில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்போம் என்று கூறிய பா.ஜ.க வினர் ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் பிரச்சனைகளில் மெத்தனப் போக்கையே காட்டுகிறார்கள்.

மேலும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதும், சிறைப்பிடிக்கபடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்காக முக்கிய நடவடிக்கைகள் ஏதும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து காவிரிப் பிரச்சனையை நிரந்தரமாக தீர்ப்பதற்கும் முன்வரவில்லை. இந்தியாவில் 75 சதவிகிதம் பேர் கிராமங்களில் வாழ்கிறார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள்.

மகளிர் முன்னேற்றம் காண கொண்டுவரப்பட்ட சுய உதவிக்குழு திட்டதிற்கு போதுமான நிதி ஒதுக்காமல் அதனையும் கிடப்பில் போட நினைக்கிறார்கள். முக்கிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேறும் போது பிரதமர் கலந்து கொள்ளவில்லை. எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பை பெறாமல் சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுகிறார்கள். ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு திட்டங்களின் பெயர்களை மாற்றுவதிலும் அதனை முடக்கவும் அக்கறை காட்டுகிறார்கள்.

மக்களின் முன்னேற்றத்திற்கான முக்கிய புதிய திட்டங்கள் ஏதும் வகுக்கப்படவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது இந்தியா முழுவதும் சுற்றி வந்த மோடி இப்பொழுது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தியர்களின் நன்மதிப்பை குறைக்கும் வகையில் பேசி இருக்கிறார். பா.ஜ.க வினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறிய வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்க விட்டு, ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மக்களுக்கு ஏமாற்றத்தையும், சுமையையும் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து