முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான இளம்பெண் பவித்ரா ஐகோர்ட்டில் ஆஜர்: காப்பகத்தில் சேர்க்க நீதிபதிகள் உத்தரவு

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்த பழனியின் மனைவி பவித்ரா. இவர் மாயமானது தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஷகில் அகமதுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதன்பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் பலியானார். போலீசார் அவரை அடித்துக் கொன்று விட்டதாக கூறி ஆம்பூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது.

இச்சம்பவத்தை அடுத்து பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட 7 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.போலீஸ் விசாரணையில் மாயமான பவித்ராவுக்கு ஷகில் அகமதுவுடன் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது.இதுதொடர்பாக பவித்ராவின் கணவர் பள்ளி கொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்ததுடன் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து பவித்ராவை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் செல்போன் மூலமாக துப்பு துலக்கி சென்னையில் பதுங்கி இருந்த பவித்ராவை நேற்று காலையில் மீட்டனர்.பின்னர் வேலூர் கோர்ட்டில் பவித்ரா ஆஜர் படுத்தப்பட்டார். அவரை காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலூர் அருகே உள்ள அரியூர் பெண்கள் காப்பகத்தில் நேற்று இரவு பவித்ரா தங்க வைக்கப்பட்டார்.இன்று காலை 7 மணிக்கு ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பவித்ராவை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரும் உடன் அழைத்து வரப்பட்டனர்.

மதியம் 12 மணிக்கு வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், சி.பி.செல்வம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள் முன்பு பவித்ரா. ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பெற்றோர், கணவர், குழந்தையும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

பவித்ராவை நீதிபதிகள் அருகில் அழைத்து விசாரித்தனர். அதன் விவரம் வருமாறு:–

நீதிபதிகள்:– உன்னை யாராவது சட்ட விரோதமாக அழைத்து வந்தார்களா?

பவித்ரா:– இல்லை.

நீதிபதிகள்:– உன் குழந்தையை வைத்திருப்பது யார்?

பவித்ரா:– கணவர் பழனி.

நீதிபதிகள்:– கணவருடன் செல்கிறாயா?

பவித்ரா:– எனக்கு விவாகரத்து வேண்டும்.

அரசு வக்கீல் தம்பித்துரை:– இந்த பெண்ணால் ஆம்பூரில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீதிபதிகள்:– பத்திரிகைகளில் எல்லா விவரங்களையும் படித்தோம். திருமணம் ஆன பின்பு கணவருடன் தான் வாழ வேண்டும். உன்னால் (பவித்ரா) தான் பிரச்சினை. உனக்கும், ஷகிலுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகவில்லை என்றால் இப்போது சந்தோஷமாக வாழ சட்டம் அனுமதிக்கும். ஆனால் உனக்கு ஏற்கனவே தாய் மாமனுடன் திருமணமாகி குழந்தை இருக்கிறது. ஷகில் அகமதுவுக்கும் திருமணம் ஆகி விட்டது. திருமணம் ஆனவருடன் சென்றதால் தான் உனக்கும், ஷகில் அகமது குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பவித்ரா:– எனக்கு விவகாரத்து வேண்டும்,

நீதிபதிகள்:–விவாகரத்து என்ன பெட்டிக் கடையிலா கிடைக்கிறது. நினைத்தவுடன் வாங்கிக் கொள்வதற்கு? பெற்றோர் கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைக்கிறார்கள். கணவனுடன் தான் வாழ வேண்டும். திருமணமானவருடன் நட்பு வைத்ததால் தான் இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சாதி கலவரம், மத கலவரம் ஏற்படுகிறது. தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது. இதுபோன்ற பிரச்சினையால் தேவையில்லாத கலவரம் ஏற்பட்டுள்ளது.

அரசு வக்கீல் தம்பித்துரை:– கலவரத்தால் ரூ.50 லட்சம் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது. ஷகில் அகமது போலீஸ் காவலில் சாகவில்லை. ஆஸ்பத்திரியில் தான் இறந்து இருக்கிறார்.

நீதிபதிகள்:– அது நடந்தது நடந்ததாக இருக்கட்டும். அது முடிந்து போன பிரச்சினை. பவித்ரா இப்போது பெற்றோருடன் செல்லட்டும். அவர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.ஆனால் பவித்ரா பெற்றோருடன் செல்ல மறுத்ததால் காப்பகத்தில் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து