முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருணா தகவல்

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      உலகம்

கொழும்பு - இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தவரும், இலங்கையில் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான கருணா தெரிவித்துள்ளார். மேலும் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் ராணுவ ஷெல்வீச்சில் உயிரிழந்ததாகவும் கருணா தெரிவித்துள்ளார்.  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா. இலங்கை அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் இயக்கத்தில் கருணா வெளியேறினார்.

அதன் பின்னர் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவுடன் கருணா கை கோர்த்துக் கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவரானார்; துணை அமைச்சராகவும் பதவி வகித்தார். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் கருணாவை சுதந்திர கட்சி போட்டியிட அனுமதிக்கவில்லை. நியமன எம்.பி.யாகவும் நியமிக்கவில்லை. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றுக்கு கருணா அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவக் கட்டமைப்புக்கான பொறுப்பாளராக இருந்தேன். நார்வேயில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது கூட்டாட்சி முறையை நான் வலியுறுத்தினே. ஆனால் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இதில் தயக்கம் காட்டினார். இருப்பினும் அதில் கையெழுத்திட்டோம். இலங்கைக்கு நாங்கள் திரும்பியபோது எங்கள் மீது பிரபாகரன் கோபம் கொண்டார். 

அவரைப் பொறுத்தவரையில் தனிநாடு என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தது. இதனால்தான் நான் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற நேரிட்டது. அதே நேரத்தில் புலிகளுடன் சகோதர யுத்தம் நடத்துவதை நான் விரும்பவில்லை. அதனால் என்னுடன் வந்த போராளிகளை வீட்டுக்குப் போக கூறிவிட்டேன்.  இலங்கை இறுதிப் போரில் இந்தியா உதவி செய்தது; இந்திய ராணுவத்தினரே களத்தில் நின்று இலங்கைக்கு ஆதரவாக போராடினார்கள். நான் ஒருபோதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் காட்டியே கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் இறுதிப் போரில் மேற்கொண்ட போர் வியூகத்தில் ஏற்பட்ட பிழைதான் அவர்களது தோல்விக்கு காரணம். அவர்கள் ஒரே இடத்தில் போராளிகளை ஒன்றாக குவிக்காமல் கடைசியாக கொரில்லா போர் முறையை கையிலெடுத்திருந்தால் மக்களும் போராட்டமும் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.  இறுதிப் போரை நிறுத்துமாறு இந்தியாவுக்கு உரிய அழுத்தத்தைத் தர தமிழகம் கொடுக்காமல் போய்விட்டது. 6 கோடி தமிழர்களும் கிளர்ந்தெழுந்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும்.

இலங்கை இறுதிப் போரில் வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் போன்ற தலைவர்கள் சுட்டுக் கொன்றது தவறு. இதற்கு களத்தில் இருந்த ராணுவமே பொறுப்பாகும். அந்தப் போரில் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் ஷெல் வீச்சில் உயிரிழந்துவிட்டதாக உறுதியான தகவல் உண்டு. இதனைத் தொடர்ந்து இளைய மகன் பாலச்சந்திரனுடன் பிரபாகரன் இடம்பெயரும் போது பாலச்சந்திரன் கைது செய்யப்படுகிறார். இதனைத் தொடர்ந்து பிரபாகரன் கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வலது கை பழக்கம் உள்ள பிரபாகரன் இடப்பக்கத்தில் இருந்த கைத் துப்பாக்கியை வலது கையால் எடுத்து நெற்றிப் பொட்டின் மீது வைத்து சுட்டிருந்ததால்தான் அவரது தலை பிளவுபட்டுள்ளது. நிச்சயமாக இலங்கை ராணுவத்திடம் உயிரோடு பிடிபடும் சூழ்வதை பிரபாகரன் விரும்பமாட்டார். அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். மகிந்த ராஜபக்சேவைப் பொறுத்தவரை தமது ஆட்சிக் காலத்தில் இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் போய்விட்டார். இவ்வாறு கருணா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்