முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கோவா-கொல்கத்தா ஆட்டம் டிரா

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

படோர்டா: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் புதனன்று நடந்த கோவா எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. கோவா மாநிலம் படோர்டாவில் நடந்த இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆட்டத்தில் இரு அணி களுமே 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆட, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோவாவின் கோல் வாய்ப்பை முறியடித்தார் அட்லெடிகோ கோல் கீப்பர் அமாரின்டர்.

ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் கோல் கம்பத்தின் வலது புறத்தில் இருந்த கொல்கத்தா மிட்பீல்டர் ஜேவி லாராவிடம் பந்து செல்ல, அவர் மிக அற்புதமாக கோல் கம்பத்துக்கு அருகில் நின்ற ஸ்டிரைக்கர் இயான் ஹியூமை நோக்கி பந்தை கிராஸ் செய்தார். அப்போது ஹியூமின் பின்னால் நின்ற மிட்பீல்டர் அரட்டா ஸுமி, பறந்து வந்த பந்தை அப்படியே கோல் கம்பத்தை நோக்கி திருப்ப, அது கோலானது. கொல்கத்தா 1-0 என முன்னிலை பெற்றது.

இதன்பிறகு அரட்டா ஸுமி மீண்டுமொரு முறை கோலடிக்கும் வாய்ப்பை நெருங்கினார். ஆனால் அவர் அடித்த பந்து கோவா கோல் கீப்பரின் காலில் பட்டு வெளியேறியதால் கோவா அணி தப்பியது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

2-வது பாதி ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் பல்ஜித் சானி கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடிக்க, அதை கோவா பின்கள வீரர் கிரிகோரி தடுத்தார். அப்போது பல்ஜித் சானி, கிரிகோரியை கீழே தள்ள சானிக்கு நடுவர் யெல்லோ கார்டு கொடுத்தார். அதனால் கோபமடைந்த சானி, கிரிகோரியின் முகத்தில் தலையால் முட்டினார். இதையடுத்து அவருக்கு ரெட் கார்டு கொடுத்தார் நடுவர். இதையடுத்து அவர் வெளியேற, 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது கொல்கத்தா. அதன்பிறகு தொடர்ந்து வேகம் காட்டிய கோவா, 81-வது நிமிடத்தில் கோலடித்து ஸ்கோரை சமன் செய்தது. அந்த அணியின் மந்தர் தேசாய் கொடுத்த கிராஸை சரியாகப் பயன்படுத்திய ரெய்னால்டோ தலையால் முட்டி கீனான் அல்மெய்டா வசம் பந்தை அனுப்ப, அவர் மிக வேகமாக கோலடித்தார். இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்