முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7–வது ஊதிய குழு பரிந்துரையை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பிப்ரவரி 2014–ம் ஆண்டில் ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. 4, 5, 6–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அளவை விட 7–வது ஊதிய குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வு குறைவாக உள்ளது. ஆகவே இந்தப் பரிந்துரையாவது அரசு ஏற்க வேண்டும்.குறைந்த பட்ச ஊதியம் (மாதம்): ரூ. 26 ஆயிரமாக இருக்க வேண்டும். ஆனால் அது ரூ. 18 ஆயிரம் அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதனால் கீழ்மட்ட ஊழியர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இது உயர்த்தப்பட வேண்டும். அடிப்படைச் சம்பளம் உயர்வு என்ற காரணம் காட்டி, வாடகைப் படி 3 சதவீதம் போதுமென்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் கடை நிலை ஊழியர்கள், ரெயில்வே, பாதுகாப்பு மற்றும் தபால் துறை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.இக்குறை நீக்கப்பட்டு, நியாயமான வாடகைப்படி வழங்கப்பட வேண்டும். உயர்நிலை அதிகாரிகளுக்கு இருப்பது போல், கீழ்நிலை ஊழியர்களுக்கும் பணிக்காலத்தில் 5 பதவி உயர்வுகள் பெற வழி வகைச் செய்ய வேண்டும்.

6–வது ஊதியக்குழுவின் படி குழந்தை பராமரிப்புக்கு முழு ஊதியத்துடன் 2 ஆண்டு விடுப்பு உண்டு; ஆனால் 7 ஆவது ஊதியக்குழுவின்படி முதல் ஆண்டு: முழு ஊதியம், 2 ஆம் ஆண்டு: 80 சதவீதம் ஊதியம். இது ஏற்கனவே உள்ள சலுகையைப் பறிப்பதாகும். மிகுதி நேர வேலைப்படி போன்ற 62 படிகள் எடுக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் வட்டியில்லா கடன்: நிறுத்தப்பட உள்ளது; குறைந்தபட்ச ஊதிய விகிதத்துக்கும், அதிகபட்ச ஊதிய விகிதத்துக்கும் உள்ள வேறுபாடு மேலும் அதிகரித்துள்ளது வரவேற்புக்கு உரியது அல்ல. கீழ்நிலை ஊழியர்கள் எண்ணிக்கையில் அதிகம். எனவே அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.எனவே அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியத்தாரர்கள் ஆகியோர்களின் நலன் கருதி மத்திய அரசு 7–வது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்