முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை போலீசில் ஆஜராகாத சிம்பு : ஒரு மாத அவகாசம் கேட்டு கடிதம்

சனிக்கிழமை, 19 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கோவை போலீஸ் சம்மன் அளித்தும் அனிருத்தும், சிம்புவும் நேற்று கோவை செல்லவில்லை. அதற்கு பதிலாக சிம்பு ஒருமாதம் அவகாசம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார் ஆனால் அனிருத்தோ தனக்கும் பீப் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை என்கிற ரீதியில் விளக்க கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து ஒருவாரம் அல்லது 10 நாட்களில் இருவருக்கும் மீண்டும் சம்மன் அனுப்ப கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இசையமைத்து பாடிய ஆபாச பாடல் ஒன்று சமூக வலைதளத்தில் அண்மையில் வெளியானது.

இப்பாடலில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தன. இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக களத்தில் இறங்கிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தனர். உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நடிகர் சிம்புவுக்கும், அனிருத்துக்கும் கோவை போலீசார் சம்மன் அனுப்பினர்.

டிசம்பர் 19ம் தேதி (நேற்று ) கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்திட வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.கோவை காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சிம்பு விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதோடு வழக்கு விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தது. இதையடுத்து, சிம்பு, அனிருத் இருவரும் நேற்று கோவை காவல்நிலையத்தில் ஆஜராவார்களா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சம்மனை ஏற்று இருவரும் நேற்று ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக விளக்கக் கடிதங்கள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நேரில் ஆஜரானால் கைதாக வாய்ப்பு உள்ளது என்று அஞ்சியே சிம்புவும், அனிருத்தும் சம்மனை ஏற்று ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.டி.ராஜேந்தர் எழுதியுள்ள கடிதத்தில், சிம்பு கொஞ்சம் வேலையில் பிசியாக இருப்பதால், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து 30 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அனிருத்தின் தந்தை ரவிராகவேந்திரர் அனுப்பியுள்ள கடிதத்தில், "சர்ச்சைக்குரிய அந்த பாடலுக்கு அனிருத் இசையமைக்கவே இல்லை. இதை ஏற்கனவே மீடியாக்கள் மூலம் தெரிவித்து விட்டோம். இந்த பாடலுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தமே இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து அனிருத்தை விடுவிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அனிருத் சார்பில் அவரது வழக்கறிஞர் காவல்நிலையத்தில் ஆஜராகி அனிருத் தரப்பு விளக்கத்தை கூறியுள்ளார். சிம்பு, அனிருத் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். சிம்பு தரப்பில் கோரப்பட்ட 30 நாள் அவகாசம் என்பதை கொடுக்க முடியாது. அதேபோல் விசாரணையின்றி அனிருத் தரப்பு வாதத்தையும் ஏற்க முடியாது என்று கூறியுள்ள போலீசார், இருவருக்கும் மீண்டும் ஒருவாரம் அல்லது 10 நாளில் சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்