முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதன்கோட் தாக்குதலில் மவுலானா மசூத் தொடர்புக்கு போதிய ஆதாரங்கள் இல்லை: பாகிஸ்தான் அரசு ?

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத் - இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார் தொடர்புக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான், இந்தியாவிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பதன்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார் உத்தரவிட்டார் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஜனவரி 2–ந் தேதி ஊடுருவினர். தொடர்ந்து 4 நாட்கள் தாக்குதல் நடத்தினர். நமது பாதுகாப்பு படையினர் தீரமுடன் பதிலடி கொடுத்து, 6 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இருப்பினும், இந்த தாக்குதலின்போது, நமது பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தது நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியது.

பதன்கோட் விமானப்படை தளம் மீதான தாக்குதலானது, பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களை இந்தியா ஒப்படைத்தது. மேலும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டிய இந்தியா, இதற்கான தக்க ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் சமர்பிப்பித்தது.  இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தலைவர் மவுலானா ஆசாத்   பதன்கோட் தாக்குலுக்கு உத்தரவிட்டார் என்பதை  நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள், இந்தியாவிடம் தகவல் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பதன்கோட் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய 6 பேர் அடங்கிய விசாரணைக்குழுவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைத்து அண்மையில் உத்தரவிட்டார். இந்தக்குழு இந்தியா அளிக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், இந்தியா வழங்கிய ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது, இந்த விசாரணையில் உண்மையிலேயே பாகிஸ்தான் அக்கறை காட்டுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  பதன்கோட் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை அந்நாட்டுடனான வெளியுறவுத்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்தியா தற்காலிமாக ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்