முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: உம்மன்சாண்டியை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி–வெளிநடப்பு

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரள சட்டசபையில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் உம்மன்சாண்டியை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பின் எதிர்கட்சி தலைவர் அச்சுநாதன் தலமைமையில் வெளிநடப்பு செய்தனர். கேரள சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அங்கும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கேரளாவில் தற்போது உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. இதன் இறுதி பட்ஜெட் கூட்டம் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாளன்று கவர்னர் சதாசிவம் உரை நிகழ்த்திய போது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவர்களை கவர்னர் கண்டித்ததை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அன்று முதல் கூட்டம் நடந்த அனைத்து நாட்களும் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, எதிர்கட்சி தலைவர் அச்சுநாதன் தலமைமையில் வெளிநடப்பு செய்தனர்.

நேற்று கேரள சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஊழல் புகார் காரணமாக நிதி அமைச்சர் மாணி பதவி விலகியதால், அவரது இலாகாவை கவனித்து வரும் முதல்வர் உம்மன்சாண்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது சபையில் இருந்த எதிர்க்கட்சியினர் உம்மன்சாண்டியை கண்டித்து கோஷம் எழுப்பினர். அவர்களை சபாநாயகர் சமரசம் செய்தார். இருப்பினும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் தாக்கல் ஆகும் முன்பே அது தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்து விட்டதாகவும், இதற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்றும் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர். அவர்களின் அமளிக்கு இடையே உம்மன் சாண்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் பட்ஜெட் குறித்து கூறும்போது, காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் பூரணமாக நிறைவேற்றி உள்ளது.

அந்த மனநிறைவுடன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இதில், உள்ள குறைகளை மக்கள் தெரிவிக்கட்டும். எதிர்க்கட்சியினர் பட்ஜெட்டை படித்து பார்த்த பின்பு, அதன் குறைகளை விமர்சிக்கட்டும் என்றார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கேரளாவில் நிதி அமைச்சர்கள் மட்டுமே இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். முதல்வராக இருப்பவர் பட்ஜெட் தாக்கல் செய்வது கடந்த 1987–ம் ஆண்டு இ.கே. நாயனார் முதல்வராக இருந்தபோது நடந்தது. அதன் பின்பு 29 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் முதல்வராக இருப்பவர் சபையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 1991 முதல் 1994 வரை கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது உம்மன் சாண்டி நிதி அமைச்சராக இருந்தார். அப்போது பட்ஜெட் தாக்கல் செய்த அவர், இப்போது முதல்வராக பதவியில் இருக்கும்போது மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்