முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நிகழ்ச்சிகளில் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு இல்லததால் சிவசேனா அதிருப்தி

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

மும்பை - மும்பையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு வழங்கப்படாததை அடுத்து சிவசேனா அதிருப்தி அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டு, ‘மேக் இன் இந்தியா’ வார விழா நேற்று முதல் 18-ந் தேதி வரை மும்பை கிர்காவ் கடற்கரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவின் அங்கமாக கலாசார நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் குழு விவாதம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளுமாறு உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பால் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்படும். இருவரும் ஒன்றாகவே அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது’’ என்றார்.

இருப்பினும், நெறிமுறைகளை கருத்தில் கொண்டு, பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பா.ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். உணவு விருந்து இந்திய தொழில் கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறிய அவர், அது அரசியல் நிகழ்ச்சி அல்ல என்றும் குறிப்பிட்டார். இதனிடையே, மேக் இன் இந்தியா வார விழாவையொட்டி நடத்தப்படும் 3 நிகழ்ச்சிகளில் உத்தவ் தாக்கரே பங்கேற்பார் என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதில், ‘‘பிப்ரவரி 14-ந் தேதி (இன்று) கிர்காவ் கடற்கரையிலும், 15-ந் தேதி(நாளை) மகாராஷ்டிரா பவிலினியலும் நடைபெறும் மகாராஷ்டிரா ரஜனி என்ற கலாசார திருவிழாவில் உத்தவ் தாக்கரே தலைமை விருந்தினராக கலந்து கொள்வார். இதையடுத்து, விழாவின் இறுதிநாளன்று (18-ந் தேதி) நடைபெறும் குழு விவாதத்தில் விருந்தினராக அவர் பங்கேற்பார்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்