முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

சனிக்கிழமை, 9 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை  - பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 19-ம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான திருவிழா இன்று (ஏப்.10) காலை 8.30 மணி முதல் 8.54 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அன்று இரவு சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சி அம்மன் விருட்சகம் வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் உலா வருவர்.

அன்று முதல் நாள்தோறும் அம்மன் சுவாமி பிரியாவிடை ஒவ்வொரு  வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வர உள்ளனர். முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.17-ம் தேதி இரவு 7.35 மணி முதல் 7.59 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மறுநாள் (ஏப்.18) திக்குவிஜயம், ஏப்.19-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் காலை 8.30 மணி முதல் 8.54 மணிக்குள் நடைபெற உள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கோயில் நிர்வாகம் சார்பில் 4 ஆயிரம் இலவச டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பதிவு செய்து, பக்தர்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.200, ரூ.500 என இருவகையான டிக்கெட்டுகள் கோயில் அலுவலகத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கல்யாணத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக 250 டன் கொண்ட திறந்தவெளி ஏசி வசதி, பக்தர்கள் அமர கோயிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டப மணமேடை அழகிய மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் அமரும் இரண்டு வீதிகளிலும் அழகிய பந்தல் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. ஏப்.20-ம் தேதி மீனாட்சி, சுவாமி, பிரியாவிடையின் தேரோட்டம் நடைபெறுகிறது. 4 மாசி வீதிகளிலும் தேர் பவனி வரும். ஏப்.21-ம் தேதி கோயில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவு பெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு அம்மன், சுவாமி வீதி உலாவில் பல்வேறு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

இதற்காக அம்மன் சுவாமி ஏறி வலம் வரும் சிம்மம், யானை உள்ளிட்ட வாகனங்கள் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் இணை ஆணையர் நடராஜ் செய்து வருகின்றார். திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வரும் பக்தற்களின் பாதுகாப்பு வசதிக்காக, போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், துணைக் கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட வெளி மாவட்ட போலீசார் உட்பட 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனையில் ஈடுபட உள்ளனர். மற்ற நாட்களில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்