முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஷ்பு போட்டியிட்டால் அவரை எதிர்த்து களமிறங்குவோம் திருநங்கைகள் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2016      அரசியல்
Image Unavailable

விழுப்புரம் : குஷ்பு தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து களமிறங்குவோம் என விழுப்புரத்தில் திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். சட்டசபைத் தேர்தலில் போட்டியிட திருநங்கைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், திருநங்கைகள் அரசியலுக்கு வருவது தொடர்பாக எதிர்மறையான கருத்தை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறியதாக சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக சத்தியமூர்த்தி பவனிலும் திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தன்மீதான குற்றச்சாட்டை குஷ்பு மறுத்தார்.

இந்நிலையில், குஷ்பு தேர்தலில் நின்றால் அவரை எதிர்த்து போட்டியிடுவோம் என திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.விழுப்புரத்தில் நேற்று மிஸ் கூவாகம் நிகழ்ச்சியின் ஆலோசகர் அருணா, விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவர் ராதா, துணை தலைவர் விமலா, துணை செயலாளர் ரூபி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் கூவாகம் திருவிழாவை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருகிறார்கள். இவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாளை (இன்று) கலை நிகழ்ச்சிகளும், மறுநாள் மிஸ் கூவாகம்-2016-க்கான அழகியை தேர்ந்தெடுக்க அழகி போட்டியும் நடத்த உள்ளோம்.

கூவாகம் திருவிழாவுக்கு வரும் எங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதி இல்லை. கோவிலில் தங்குவதற்கும் போதிய இடவசதி கிடையாது. எனவே கூவாகம் கிராமத்தில் போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுப்பதோடு திருவிழா சமயங்களில் போலீஸ் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் திருநங்கைகள் இருக்கிறார்கள். திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைக்கப்பட்டதன் மூலம் பல்வேறு திட்டங்கள் கிடைத்து வருகிறது' என்றனர்.

மேலும், அப்போது சென்னையை சேர்ந்த சுதா உள்ளிட்ட திருநங்கைகள் கூறுகையில், திருநங்கைகளில் படித்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். படித்த திருநங்கைகள், படிக்காத திருநங்கைகள் என பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறோம். அவர்களுக்கு தகுந்தாற்போல் அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும்பட்சத்தில் சமூகத்தில் எங்களது அந்தஸ்து உயர வாய்ப்புள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, தேர்தலில் போட்டியிட திருநங்கைகளுக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர்கள் என திருநங்கைகளை பற்றி இழிவாக பேசியுள்ளார். இந்த தேர்தலில் குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து திருநங்கைகளாகிய நாங்கள் போட்டியிடுவோம். அல்லது அவருக்கு எதிராக பிரசாரம் செய்வோம்" என இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்