முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழா: அழகர் இன்று ஆற்றில் இறங்குகிறார்

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெறவுள்ளது. அப்போது 10 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக கள்ளழகருக்கு நேற்று காலையில் மூன்றுமாவடியிலும் நேற்று இரவு தல்லாகுளத்திலும் எதிர்சேவை நடந்தது. அப்போது பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைத்து சேவை செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. ஆரம்பத்தில் இந்த விழா மாசி மாதத்தில்தான் நடைபெற்று வந்தது.  ஆனால், திருமலைநாயக்கர் மன்னர் காலத்தில் இந்த விழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது. சைவ, வைணவத்தை இணைக்கும் முயற்சியாக திருமலை நாயக்கர் இந்த விழாவை ஒரே மாதத்தில் நடத்தினார். அதற்கு முன்பு வரை மீனாட்சி கோவில் விழா மாசியில் தான் நடைபெற்றது. தேர் செல்லும் பாதைகள் கூட இதன் காரணமாகத்தான் மாசி வீதிகள் என்று அழைக்கப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி முறைப்படி துவங்கியது. பிறகு 10ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் பட்டாபிஷேகம் மீனாட்சி அம்மனுக்கு நடைபெற்றது. கடந்த 19ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் மறுநாள் 20ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றன.

இத்துடன் மீனாட்சி கோவில் விழா நிறைவடைய அழகர் கோவில் விழா துவங்கியது. இதன்பொருட்டு அழகர் மலையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 6.40 மணியளவில் சுந்தரராஜ பெருமாள் அழகர் வேடம் பூண்டு மதுரை நோக்கி புறப்பட்டார். அவர் மதுரை வருவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தன் சகோதரி மீனாட்சியின் திருமணத்தை காண அவர் வருவதாகவும், ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் திருமணம் முடிந்து விடுவதாகவும் இதனால், வேதனை அடைந்த பெருமாள் ஆற்றில் இறங்கி தனது கோபத்தை தணித்து கொண்டு  மீண்டும் மலைக்கு திரும்புவதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. துர்வாச முனிவரால் சாபம் பெற்ற கதபஸ் முனிவர் மண்டூகமாக (தவளை) மாறிவிடுகிறார். இவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக அழகர் மதுரை வருவதாக மற்றொரு கதை சொல்லப்படுகிறது.

மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்து விட்டு அழகர் திரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. அத்தகைய விழா தற்போது தொடங்கியுள்ளது. அழகர் இன்று வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்காக மலையில் இருந்து புறப்பட்ட அவருக்கு வழிநெடுக எதிர்சேவை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. பின்னர் இரவு தல்லாகுளத்தில் விடிய விடிய அழகருக்கு எதிர்சேவை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மண்டக படியாக அழகர் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அணிந்து வெட்டிவேர் சப்ரத்தில் அழகர் எழுந்தருளினார்.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சி இன்று நடக்கிறது. அதாவது, கள்ளழகர் இன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். அப்போது, சுமார் 10 லட்சம் பக்தர்கள் அங்கு திரண்டு அவரை தரிசனம் செய்வார்கள். ஆற்றில் இறங்கும் அழகரை வீரராகவ பெருமாள் வரவேற்பார். மறுநாள், தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் அழகர் எழுந்தருள்வார். அதன்பிறகு, தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறும். முன்னதாக மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பார் அழகர். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து 25ம் தேதி அழகர் மலையை சென்றடைவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்