முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா - புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது

வியாழக்கிழமை, 5 மே 2016      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றிப் பெற்றது.மேலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கும் முன்னேறியுள்ளது. இந்த வெற்றி கொல்கத்தாவுக்கு  6-வது வெற்றியாகும்.

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா அணியில் இரு மாற்றமாக சுனில் நரின், கிறிஸ் லைன் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பிராட் ஹாக், ஷகிப் அல்-ஹசன் திரும்பினர். பஞ்சாப் அணியில் காயமடைந்த ஷான் மார்சுக்கு பதிலாக மனன் வோரா சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் எம்.விஜய் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கவுதம் கம்பீரும், ராபின் உத்தப்பாவும் கொல்கத்தா அணியின் இன்னிங்சை தொடங்கினர். இருவரும் நிலைத்து நின்று ஆடிய போதிலும், பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களின் ரன்வேகத்திற்கு ஓரளவு அணை போட்டனர். இதனால் ஸ்கோர் சீரான வேகத்தில் தான் நகர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் (13.3 ஓவர்) திரட்டிய நிலையில் இந்த ஜோடி ரன்-அவுட்டில் பிரிந்தது. நடப்பு தொடரில் 4-வது அரைசதத்தை கடந்த கவுதம் கம்பீர் 54 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். 20 ஓவர் கிரிக்கெட்டில் கம்பீர் ரன்-அவுட் ஆவது இது 19-வது நிகழ்வாகும். அதே ஓவரில் கேட்ச் கண்டத்தில் (50 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது) இருந்து தப்பித்த உத்தப்பா 70 ரன்களில் (49 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்-அவுட்டில் சிக்கினார்.

பஞ்சாப் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசியதால், கொல்கத்தா அணியால் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியவில்லை. கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார். இந்த ஓவரில் ஆந்த்ரே ரஸ்செல் ( 16 ரன், 10 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனதும் அடங்கும். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. யூசுப் பதான் 19 ரன்களுடன் (16 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். கொல்கத்தா அணியில் 3 வீரர்களும் ரன்-அவுட் முறையிலேயே வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 165 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி ஸ்டோனிஸ் (0), மனன் வோரா (0), கேப்டன் எம்.விஜய் (6 ரன்), விருத்திமான் சஹா (24 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை 53 ரன்னுக்குள் (9 ஓவர்) இழந்து திணறியது. இந்த சூழலில் மேக்ஸ்வெல்லும், டேவிட் மில்லரும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். கொல்கத்தாவின் பவுலிங்கை துவம்சம் செய்த மேக்ஸ்வெல் 68 ரன்கள் (42 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து அணிக்கு புத்துயிர் கொடுத்தார். அவர் பியுஷ் சாவ்லாவின் சுழலில் ‘ஸ்வீப் ஷாட்’ அடிக்க முயற்சித்த போது எல்.பி.டபிள்யூ. ஆனார். அதே சமயம் மில்லர் (13 ரன், 18 பந்து) அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தாரே தவிர ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

கடைசி ஓவரில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே ரஸ்செல் அட்டகாசமாக வீசினார். அவர் வீசிய முதல் பந்தை எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்த அக்ஷர் பட்டேல் (7 பந்தில் 21 ரன்) அடுத்த பந்தில் ரன்-அவுட் ஆனார். மூன்றாவது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓடிய போது குர்கீரத்சிங்கும் (11 ரன்) ரன்-அவுட் செய்யப்பட்டார். 4-வது பந்தில் மொகித் ஷர்மா ஒரு ரன் எடுக்க, 5-வது பந்தில் ஸ்வப்னில் சிங் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் பின்னர் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தனர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றியை சுவைத்தது.

9-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 6-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப்புக்கு இது 6-வது தோல்வியாகும். மேலும், கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணி தொடர்ச்சியாக சந்தித்த 7-வது தோல்வியாகவும் இது அமைந்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய கொல்கத்தா அணியின் ஏடி ரஸல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கொல்கத்தா அணி 10–வது ஆட்டத்தில் குஜராத் லயன்சை 8-ம் தேதியும், பஞ்சாப் அணி 9-வது ஆட்டத்தல் டெல்லி டேர்டெவில்சை நாளையும் சந்திகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்