முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில் முதலிடம்

புதன்கிழமை, 11 மே 2016      விளையாட்டு
Image Unavailable

விசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனேவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது ஐதராபாத் அணி.

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இரு அணியிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அசோக் திண்டா வீசினார். அந்த ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2-வது ஓவரில் ஆர்.பி.சிங் பந்து வீச்சில் டேவிட் வார்னர் சிக்சர் தூக்கினார். 4-வது ஓவரில் டேவிட் வார்னர் (11 ரன்) ஆர்.பி.சிங் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து கனே வில்லியம்சன், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். ஷிகர் தவான் 27 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் சவுரப் திவாரியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

புனே அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடித்து ரன் எடுக்க முடியாமல் ஐதராபாத் அணி தடுமாறியது. அடித்து ஆடிய யுவராஜ்சிங் 23 ரன்னில் (21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆடம் ஜம்பா பந்து வீச்சில் சவுரப் திவாரியிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். 16.2 ஓவர்களில் ஐதராபாத் அணி 100 ரன்னை கடந்தது. நிதானமாக ஆடிய கனே வில்லியம்சன் 31 ரன்னில் (37 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) ஆடம் ஜம்பா பந்து வீச்சில் ரஜத் பாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்த பந்தில் ஹென்ரிக்ஸ் (10 ரன்) ரஜத் பாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் தீபக் ஹூடா (14 ரன்), நமன் ஓஜா (7 ரன்), புவனேஸ்வர்குமார் (1 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த 3 விக்கெட்டுகளையும் ஆடம் ஜம்பா சாய்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. பரிந்தர் ஸ்ரன் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.  புனே அணி தரப்பில் அருமையாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆடம் ஜம்பா 4 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, உஸ்மான் கவாஜா ஆகியோர் களம் இறங்கினார்கள். ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர்குமார் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். உஸ்மான் கவாஜா 11 ரன்னில் ரன்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து அஸ்வின், ஜார்ஜ் பெய்லியுடன் இணைந்தார். ஜார்ஜ் பெய்லி 40 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஹென்ரிக்ஸ் பந்து வீச்சில் நெஹராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அஸ்வின் 25 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சவுரப் திவாரி 9 ரன்னில் அவுட் ஆனார்.

6-வது விக்கெட்டுக்கு திசரா பெரேரா, கேப்டன் டோனியுடன் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் புனே அணி வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு பற்றியது. கடைசி ஓவரை வீசிய நெஹரா தனது சிறப்பான பந்து வீச்சால் புனே அணிக்கு ‘செக்’ வைத்தார். அந்த ஓவரில் திசரா பெரேரா 17 ரன்னில் ஆட்டம் இழந்தார். கேப்டன் டோனி 20 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஆடம் ஜம்பா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

20 ஓவர்களில் புனே அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்னே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. 10-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி 7-வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணிக்கு இது 8-வது தோல்வியாகும். சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய  புனே வீரர் ஆடம் ஜம்பாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.


6 விக்கெட் கைப்பற்றி ஆடம் ஜம்பா சாதனை
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே வீரர் ஆடம் ஜம்பா 6 விக்கெட் கைப்பற்றி சாதனை புரிந்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் 6 விக்கெட் எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஐ.பி.எல். போட்டியில் இது 2-வது சிறந்த பந்துவீச்சு ஆகும். 2008–ம் ஆண்டு சோகைல் தன்வீர் 14 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. ஐதராபாத் அணியில் உள்ள யுவராஜ் சிங், வில்லியம்சன், ஹென்றிங்ஸ், ஹீடா, நமன் ஒஜா, புவனேஸ்வர் குமார் ஆகியோரது விக்கெட்டுகளை ஆடம் ஜம்பா கைப்பற்றினார்.

சோகைல் தன்வீர், ஆடம் ஜம்பாவுக்கு அடுத்தப்படியாக கும்ப்ளே, இஷாந்த் சர்மா, மலிங்கா, ரவீந்திர ஜடேஜா, பல்க்னெர், அமித் மிஸ்ரா, ஹர்பஜன்சிங், சுனில் நரீன், முனாப்பட்டேல், எல்.பாலாஜி, மாஸ்சர்சென்ஸ், ஜெய்தேவ், உன்சட் ஆகியோர் ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்