முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலினையோ, தி.மு.க.வையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை : முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - மு.க.ஸ்டாலினையோ, தி.மு.க.வையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்.  தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று முன்தினம் 6 வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். இதற்கான விழா சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலினும், திமுக எம்.எல்.ஏ.,க்கள் சிலரும் கலந்து கொண்டனர். ஆனால், இந்த விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் ஒதுக்கப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி புலம்பியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக நேற்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த  அறிக்கையில் அவர் கூறியிருப்பாதவது:- 23-ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். விழாவில் அவர் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எம்.எல்.ஏ.,க்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் மு.க.ஸ்டாலின் அமரவைக்கப்பட்டதை நான் அறிந்தேன். பதவியேற்பு விழாவில் மரபு அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை பொதுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன்.

எனவே, இருக்கை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.  இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பதை அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால், மரபுப்படியான விதிகளை தளர்த்தி அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  ஆனால், ஸ்டாலின் 'இருக்கை' சர்ச்சை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றேன். ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் தமிழக மக்களுக்காக கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன். வாழ்த்துக்கள் என்று முகநூலில் பதிவை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்