முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவை புறக்கணிக்க எதிர்கட்சிகள் முடிவு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா  - மேற்கு வங்க மாநில முதல்வராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொள்ள இருக்கிறார். இதற்காக தலைநகர் கொல்கத்தாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவை புறக்கணிக்க பாஜ, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆளும் திரிணாமுல் அமோக வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் பதவியேற்க இருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க வருமாறு பூடான் பிரதமர், டெல்லி, பீகார் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் உள்ள இடதுசாரிகள், பாஜ மற்றும் காங்கிரசுக்கும் முறைப்படி அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்கு பின்னர் மாநிலம் முழுவதும் பல இடங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. இடதுசாரி தொண்டர்கள் மட்டும் அல்லாது பாஜ தொண்டர்களும் பல இடங்களில் தாக்கப்பட்டனர்.

திரிணாமுல் காங்கிரசுக்குள்ளும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜவினர் குற்றம் சாட்டியுள்ளனர். வன்முறை குறி்த்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மேற்கு வங்கத்தில் எதிர்கட்சிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட திரிணாமுல் முயற்சித்து வருகிறது என்றார். இடதுசாரி தலைவர் எஸ்.கே.மிஸ்ரா கூறுகையில், எதிர்கட்சிகள் மீது மிருக தனமான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. பெண்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை என்றார். 

டைமன்ட் துறைமுக பகுதியில் போராட்டம் நடத்திய பாஜ பெண் தலைவர் ரூபா கங்குலி கடுமையாக தாக்கப்பட்டார். மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார். குண்டர்களின் அரசாங்கம் இது என பாஜவின் சந்திரபோஸ் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து மம்தாவின் பதவியேற்பு விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க எதிர்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்