முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபை தேர்தலில் போட்டியிட மும்பையில் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2016      அரசியல்
Image Unavailable

மும்பை, ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மும்பையில் நேற்று  வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், மும்பையில் உள்ள விதான் பவனில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது மாநில முன்னாள் முதல்வர் பிரதிவிராஜ் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், முன்னாள் மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உடனிருந்தார். ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தை தவிர, முன்னாள் முதல்வர் நாராயண ரானேவும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பிகாரிலும் மனுதாக்கல்:

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 5 உறுப்பினர்கள் வரும் ஜூலை மாதம் ஓய்வு பெறுகின்றனர். இங்கு தற்போதுள்ள நிலவரப்படி பாஜக சார்பில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இப்பதவிக்கு மாநில பாஜக முன்னாள் தலைவர் கோபால் நாராயண் சிங் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பிகாரில் சட்டமேலவையின் 7 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக சார்பில் அர்ஜூன் சஹானி, வினோத் நாராயண்ஜா ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். பாஜக மூத்த தலைவர் சுசில் குமார் மோடி, கட்சியின் மாநிலத் தலைவர் மங்கள் பாண்டே, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரேம் குமார், கூட்டணிக் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி உள்ளிட்ட பலர் அப்போது உடனிருந்தனர்.

மத்தியப் பிரதேசம்:-

மத்தியப் பிரதேசம் சார்பில் மாநிலங்களவையில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 2-ல் பாஜகவும் 1-ல் காங்கிரசும் போட்டியிட உள்ளன. இந்நிலையில் பாஜக சார்பில் பிரபல பத்திரிகையாளரும் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான எம்.ஜே.அக்பர், கட்சியின் மூத்த தலைவர் அனில் மாதவ் தவே ஆகிய இருவரும் போபாலில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாஜக மாநிலத் தலைவர் நந்தகுமார் சிங் சவுகான் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அப்போது உடனிருந்தனர்.

அனில் மாதவ் தவே, மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். எம்.ஜே. அக்பர், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிரதிநிதியாக மாநிலங்களவையில் அங்கம் வகிக்கிறார். அவரது பதவிக் காலம் முடிவதால், ம.பி.யில் இருந்து அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார். ம.பி.யில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் விவேக் தங்கா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்