முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபாவுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் :  காஷ்மீர் வன்முறையில் இதுவரை 46பேர் கொல்லப்பட்டார்கள். 3ஆயிரத்து 400பேர் காயம் அடைந்தார்கள்.இந்த வன்முறை தாக்குதல் போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி தனது அமைச்சர்களுடன் சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் 16வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு டிரால் பகுதியில், கடந்த 8ம் தேதியன்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி போலீசாரால் கொல்லப்பட்டார். இந்த கொலையை தொடர்ந்து அந்த பள்ளத்தாக்கின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைகள் வெடித்தன. பிரிவினை வாதிகள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில்  வன்முறையாளர்கள் அரசு பஸ்களை எரித்தல், அரசு அலுவலகங்களை எரித்தல், கல் வீச்சில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதல்களில் இதுவரை ஒரு போலீஸ்காரர் உள்பட 46 பேர் கொல்லப்பட்டு  இருக்கிறார்கள். மேலும் 3ஆயிரத்து 400பேர் காயம் அடைந்துள்ளனர்.

காஷ்மீர் வன்முறை தொடர்ந்து நீடிப்பதால் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன . அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடக்கிறது என எதிர் கட்சியினர் பாராளுமன்றத்தில் அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் கூறுகையில், கும்பல்களை கலைக்க துப்பாக்கிக்குண்டுகளுக்கு பதிலாக ஆபத்தில்லாத கருவிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் காஷ்மீர் நிலவரம் குறித்து ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் முடித்து கடந்த வாரம் பிரதமர் மோடி நாடு திரும்பிய ஒரு மணி நேரத்தில் உயர் மட்ட கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆபத்தில்லாத வகையில் இருக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2நாள் பயணமாக காஷ்மீருக்கு சென்றார். அங்கு அவரை ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் நேற்று சந்தித்து காஷ்மீர் பதட்ட நிலைமை குறித்தும்  பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டம் பல மணி நேரம் நடந்தது. இந்த  ஆலோசனை கூட்டத்தின் இடையே  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி(பி.டி.பி.) பா.ஜ.க. மற்றும் எதிர்கட்சியான தேசிய மாநாடு கட்சி பிரதிநிதிகளை சந்தித்தார்.  காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் உயர் மட்ட கூட்டத்தை  நடத்தினார். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது அவர் விவாதித்தார்.

காஷ்மீரில் தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்ட நாளை கறுப்பு நாளாக அனுசரிப்போம் என்றும் காஷ்மீர் சுதந்திரத்திற்கு போராடும் மக்களுக்கு துணை நிற்போம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். இந்த கருத்து குறித்து உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் காஷ்மீரில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டக்கூடாது என்றும் வன்முறைக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தியும் கடும் கண்டனம் தெரிவித்தார்.  

காஷ்மீரில் 5 மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. கோடை கால தலைநகரான ஸ்ரீநகரில் பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக  சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 16வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்