முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து விளக்க கூட்டம் தமிழகம் முழுவதும் வரும் 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தனி மனிதரும், ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும் இந்த பட்ஜெட் குறித்து இணையதளங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.வினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு.,

வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடர் வெற்றியைப் பெற்று தமிழக மக்களின் ஆதரவோடும், நல்வாழ்த்துகளோடும் 6-வது முறையாகத் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், பல்வேறு நடவடிக்கைகள் வழியாகத் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைத்திருக்கிறேன். மக்கள் நலப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் நாட்டிற்கே முன்னோடியாகத் திகழும் எனது தலைமையிலான அரசின் 2016-2017-ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்ட அறிக்கை சட்டமன்றத்தில் கடந்த 21-ம் தேதி  தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு தரப்பினரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.

இந்தப் புதிய பட்ஜெட் வழியாக தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களை மக்கள் அனைவரும் புரிந்து மகிழும் வண்ணம் அ.தி.மு.க அரசின் 2016-2017-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் வருகின்ற  30-ம் தேதி  முதல்  ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மூன்று நாட்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும். கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்பு கொண்டு பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரும், ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று முன்னேறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிதி நிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை பொதுக்கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றின் வழியாக மட்டுமின்றி நவீன தொடர்பு வழிகளான இணையம் மற்றும் டிஜிட்டல்-மின்னணு சாதனங்கள் வழியாகவும் விரிவாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்