முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் கோடி கணக்கில் பண பரிவர்த்தனை பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று நடத்திய வேலை நிறுத்தத்தால் ரூ.19 ஆயிரம் கோடி காசோலைகள் பண பரிவர்த்தனை இல்லாமல் முடங்கின.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். வங்கிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகள் மீது திணிக்கும் கொள்கைகளை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்றுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்த வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி நடந்தது.

இதில்  43 வணிக வங்கிகள் 50 கிராம வங்கிகள் ஆகியவற்றில் பணியாற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றார்கள். இதனால் நாட்டின் பெரும்பாலான வங்கிகள் செயல்படாமல் முடங்கின. இதற்கிடையே சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று காலை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட 9 சங்கங்கள் கலந்து கொண்டுள்ளதால் இந்த வேலை நிறுத்தப்போராட்டம் முழு வெற்றி  அடைந்ததாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இந்த போராட்டத்தால்  வங்கிகள் பணம் போடுவது உள்ளிட்ட சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டார்கள். காசோலை பரிவர்த்தனை இல்லாததால் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது,

போராட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், அயல் நாட்டு வங்கிகள், உள்பட 80 ஆயிரம் கிளைகளில் இருந்து 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்தியஅரசு முயற்சித்து வருகிறது. அப்படி நடந்தால், விவசாய கடன், கல்வி கடன், உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்படும். தனியார் நிறுவனங்கள் லாப நோக்கில் மட்டுமே செயல்படுவார்கள்.

இதனால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பொதுநலன சார்ந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியுள்ளோம். நிதியமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில், ரூ.78 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்கள் யார், எத்தனை ஆண்டுகளாக அவர்கள் வங்கிகளுக்கு பணத்தை செலுத்தாமல் உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட வேண்டும். நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில், சென்னையில் மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள 8 லட்சம் காசோலைகள் மற்றும் நாடு முழுவதும், ரூ.19ஆயிரம் கோடி மதிப்புள்ள 26 லட்சம் காசோலைகள் முடங்கியுள்ளன. எங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்