முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா - 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலத்திரு விழா வருகிற 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் தமிழ் விழாக்கள் நடத்தப்படுகின்றன. தற்போது ஆடி மாதத்தில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் நடக்கிறது. அம்மனை மையமாக வைத்து நடைபெறும் இத் திருவிழா ஆடி 29ம்தேதியுடன்(ஆக.13) முடிவடைகிறது.

அதன் பிறகு சுவாமியை மையமாக வைத்து ஆவணி மாதத்தில் ஆவணி மூல திருவிழா, நடத்தப்படுகிறது. இவ்விழா வருகிற 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று முதல் செப்டம்பர் மாதம் 2ம்தேதி வரை காலையிலும் இரவிலும் சந்திரசேகரர் சுவாமி திருக்கோவில் 2ம்   பிரகாரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பின்னர் 3ம் தேதி கருங்குருவிக்கு உபதேசமும், 4ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளும் லீலையும், 5ம் தேதி மாணிக்கம் விற்கும் லீலையும் 6ம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், இதனைத்தொடர்ந்து பாகனுக்கு அங்கம் வெட்டுதல், திருஞான சம்பந்தர் சைவ சமயத்தை நிலை நாட்டியது சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அதன் பின்னர் மாணிக்க வாசகருக்கு நரியை பரியாக்கிய லீலையும்  செப்டம்பர் 10ம் தேதியும் முக்கிய நிகழ்ச்சியான புட்டுக்கு மண் சுமக்கும் லீலை 11ம் தேதியும் நடக்கின்றன.

ஆவணி மூல திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி 11ம் தேதியன்று காலை கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். இவ்விழா 14ம் தேதி முடிவடைகிறது.

இவ்விழா நடைபெறும் காலங்களில் அதாவது ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ம் தேதி வரை கோவில் மற்றும் பக்தர்கள் சார்பில் திருக்கல்யாணம், தங்க ரதம் உள்பட உபயதாரர்கள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன என கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்