முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாடலாசிரியர் முத்துக்குமாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு - தலைவர்கள், கலைஞர்கள் புகழஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2016      சினிமா
Image Unavailable

சென்னை : பாடலாசிரியர் முத்துக்குமாரின் மறைவு  ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று தலைவர்கள், கலைஞர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கருணாநிதி:
இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு, ''திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.
என் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட தம்பி நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்:
 ''திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன்.
2005- ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்று தமிழ்த் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கவிஞர் நா.முத்துகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் பேரிழப்பு.

கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

சரத்குமார்:
முத்துகுமார் மறைவுச்செய்தி கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நம்முடன் இல்லை என்பது அதிர்ச்சி தருகிறது. ஒரு நல்ல ஆத்மாவை நாம் இழந்துள்ளோம் என்று சரத்குமார் தன் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

வைகோ:
''திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்த் திரைப்பட உலகுக்கும் இலக்கிய உலகுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

மிகக் குறுகிய காலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உச்ச புகழைத் தொட்ட, இரண்டு முறை தேசிய விருது பெற்ற கவிஞரான முத்துக்குமாரின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ எனும் பாடல் தந்தைக்கும் மகளுக்குமான உயரிய அன்பை வெளிப்படுத்தியது.

அந்தப் பாடலைக் கேட்கிற ஒவ்வொரு தகப்பனின் உள்ளத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இன்னும் திரையுலகில் மிகப் பெரிய சாதனைகளை அரங்கேற்றி தமிழ் உலகுக்கு பெருமை சேர்க்க வேண்டிய அந்த இளம் கவிஞர் நா. முத்துக்குமார் மறைவுக்கு எனது சார்பிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.

விஜயகாந்த்:
''தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்து பல விருதுகளையும், இரண்டு தேசிய விருதை பெற்ற நா.முத்துக்குமார், நான் நடித்த விருதகிரி, சகாப்தம் படங்களுக்கும் பாடல்களும் எழுதியுள்ளார்.

முத்துகுமார் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் திரையுலகினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

கி.வீரமணி:
''தமிழ்த் திரைப்பட உலகில் அண்மைக் காலத்தில் அனைவரின் கவனத்தையும் தமது அழுத்தமான கருத்துச் செறிந்த பாடல் வரிகளால் ஈர்த்த கவிஞர் நா.முத்துக்குமார் (வயது 41) மறைந்த செய்தி அறிந்து திடுக்குற்றோம். இன்னும் எவ்வளவோ சாதனைகளை படைக்க வேண்டிய ஒருவரை நாம் இழந்திருப்பது வேதனைக்குரியது.
மாணவர் பருவம் தொட்டு பெரியார் திடலோடு அணுக்கமான தொடர்பு கொண்டவர். கழகப் பிரச்சார பாடல்களை எழுதிக் கொடுத்தவர். தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, கழகத்தால் பெரியார் விருதும் பெற்ற இளந்தமிழர் ஒருவர் மறைந்தது தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பாகும்.  அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் திரை உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

வேல்முருகன்:
 ''திரைப்படப் பாடலாசிரியாக அண்ணன் அறிவுமதி அவர்களின் 73, அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர் எனும் தமிழ்ப் பட்டறையில் தீட்டப்பட்டு புடம்போட்ட வைரமாக ஜொலித்த நா. முத்துக்குமாரின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.

இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள்... இன்னமும் வெளிவராத பல படங்களுக்கான பாடல்கள்... அத்தனையிலும் அன்னைத் தமிழின் அழகு வார்த்தைகளை அள்ளித் தெளித்தவர் நா. முத்துக்குமார்.

ஒரு பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் இனமான உணர்வுமிக்கவராக திகழ்ந்த நா. முத்துக்குமார் உடல்நலக் குறைவால் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பது தமிழ் சமூகத்துக்கு பெருந்துயரம். நா. முத்துக்குமாருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் செம்மாந்த இறுதி வணக்கம்'' என்று வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்:
''சிறந்த கவிஞரும், பாடாலசிரியருமான நா.முத்துக்குமார் மறைவு செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த நா. முத்துக்குமார், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கி, சிறந்த பாடலாசிரியராக வளர்ந்தார். 'தங்கமீன்கள்' திரைப்படத்தில், மகளுக்கும் - அப்பாவுக்குமான உறவை பாடல்களில் வடித்தெடுத்த அவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றவர்.
திரைப்பாடல்கள் மூலமும், கவிதைகள் மூலமும் கலை உலகில் நீங்கா இடம்பெற்ற நா.முத்துக்குமார் இளம் வயதில் மரணித்திருப்பது ஆழ்ந்த வருத்தம் தருகிறது. அவரது இணையர் தீபலஷ்மி, குழந்தைகள், குடும்பத்தார், நண்பர்களுக்கு அனுதாபங்கள்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்:
முத்துக்குமாரின் மறைவு குறித்து பிரகாஷ் வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்ப முடியவில்லை. எனது படங்களில் மட்டும் 200 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு கடவுள்தான் பலம் தர வேண்டும் என்று வேதனை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரசன்னா:
நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ள டிவிட்டில், அதிர்ச்சியாக இருக்கிறது. பெரும் சோகமாக இருக்கிறது. மிக மிக அவசரமான மரணம் இது.

நடிகர் கணேஷ் வெங்கட்ராம்:
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் வெளியிட்டுள்ள செய்தியில், அதிர்ச்சி தருகிறது. பெரும் வேதனையாக உள்ளது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

நடிகர் சதீஷ்:
நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள டிவிட்டில், நா. முத்துக்குமார் சாரின் மரணச் செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது. அவரது குடும்பத்துக்கு எனது இரங்கல்கள்.

நடிகர் சித்தார்த்:
நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்பவே முடியவில்லை. சாகும் வயதா இது. கடவுள் அவரது குடும்பத்துக்குப் பலம் தரட்டும். மிகப் பெரிய இழப்பு. மிக மிக சோகமான நாள் என்று வேதனையை வெளியிட்டுள்ளார்.

பாடகி சின்மயி:
பாடகி சின்மயி வெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்கு மிகப் பெரிய மிக மோசமான இழப்பாகும் இது. மிக மிக துரிதமான மரணம் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் அதர்வா:
நடிகர் அதர்வா வெளியிட்டுள்ள செய்தியில், இதயமே சுக்கு நூறாக நொறுங்குவது போல உள்ளது. நா. முத்துக்குமார் சாரின் மரணத்தை நம்ப முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்துக்கு அனைத்துப் பலமும் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார் அதர்வா.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்