முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 மாத சம்பளம் தரும் வரை சவுதியில் இருந்து வெளியேற மாட்டோம் : இந்திய தொழிலாளர்கள் திட்டவட்டம்

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

ஜெட்டா  - 7 மாத சம்பளம் தரும் வரை சவுதியில் இருந்து வெளியேற மாட்டோம் என்று இந்திய தொழிலாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் வேலையின்றி பரிதவிக்கும் இந்திய தொழிலாளர்களை மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் நேரில் சந்தித்துப் பேசினார்.  சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டின் கட்டுமான நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளன. அத்தகைய நிறுவனங்களில் பணியாற்றிய 7700 இந்திய தொழிலாளர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

உணவின்றிப் பரிதவித்த அவர்களுக்காக இந்திய தூதரகம் சார்பில் சவுதி முழுவதும் 20 முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களைப் பத்திரமாக இந்தியா அழைத்து வருவது தொடர்பாக மத்திய வெளியுறவுதுறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்த மாத தொடக்கத்தில் சவுதி சென்றார். அவரது முயற்சியால் கடந்த 12-ம் தேதி 26 இந்தியர்கள் நாடு திரும்பினர். இந்நிலையில் அமைச்சர் வி.கே.சிங் 2-வது முறையாக கடந்த புதன்கிழமை சவுதி சென்றார். அங்கு அவர் இந்திய தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறார். அவர் ஜெட்டாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் ஆலோ சனை நடத்தினார்.

அப்போது இந்தியா திரும்ப விருப்பமுள்ளவர்கள் தாய்நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் வேறு நிறுவனங்களில் பணியாற்ற விரும்புவோருக்கு உதவிகள் வழங்கப்படும் என்றும் வி.கே.சிங் கூறினார்.  பொதுவாக வெளிநாட்டு ஊழியர்கள் தாய்நாடு திரும்ப பணியாற்றும் நிறுவனங்களின் ஒப்புதல் தேவை. அந்த விதியில் இருந்து பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் தவிக்கும் தொழிலாளர்கள் சட்டரீதியாக சவுதியில் தங்கி வேலை தேடவும் சவுதி அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஜெட்டாவில் நிருபர்களிடம் பேசியபோது, எங்களுக்கு பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை. வெறும் கையுடன் நாங்கள் நாடு திரும்ப முடியாது. எங்கள் வேலைக்கான சம்பளத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும். அதுவரை சவுதியில் இருந்து வெளியேறமாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்