முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 நாள் சாதனைகளுக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, 100 நாள் சாதனைகளுக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமாறு.,

1984 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக்கு பிறகு எந்த ஒரு கட்சியும், தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றாத நிலையிலும், கோடி பகை ஒன்று கூடி நின்று எதிர்த்த போதிலும், நிலையான ஆட்சியே நிரந்தர வெற்றியை அளிக்கவல்லது என்பதற்கேற்ப, தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் பணியே அறப்பணி என்பதை கருத்தில் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்து கொண்டிருக்கிறார்.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நிகழ்த்திய சாதனையை மிஞ்சும் வகையில் நாளுக்கு நாள் வேகத்தை அதிகப்படுத்தி மக்கள் பணிக்கான தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறார். தமிழகமே எனது குடும்பம், தமிழ்நாட்டு மக்களே என் பிள்ளைகள், தமிழக மக்களின் நலனே என் நலன் எனவும், மக்களால் நான், மக்களுக்காகவே நான் எனவும் சூளுரையை கையில் கொண்டு 100 நாள்களில் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்த முடியுமா? என அதிசயிக்கும் வகையில் சிறு,குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி, அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான கூடுதல் கட்டணமில்லா மின்சாரம், தாலிக்கு தங்கம், 500 மதுக்கடைகள் அடைப்பு, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகு நாட்டிற்கு அர்ப்பணிப்பு, விவசாயிகள் நலனுக்காக 54.65 கோடி மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், 64.30 கோடி மதிப்பில் சம்பா சாகுபடி சிறப்புத் திட்டம், நுண்ணீர் பாசன வசதி, மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம், 239 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், 180.98 கோடி ரூபாய் மதிப்பில் மகப்பேறு நிதி உதவி திட்டம், ரூ.890 கோடி மதிப்பில் மாணாக்கருக்கு விலையில்லா மடிக்கணினி, ரூ.182.33 கோடி மதிப்பில் விலையில்லா ஆடு மற்றும் கறவை பசுக்கள் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி நல்முறையில் தொடர என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்