முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிகர்கள் மாதாந்திர நமூனாக்கள் கணினியில் பதிவேற்றம் செய்ய 228 இலவச உதவி மையங்கள் - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : வணிகர்கள் தங்களது மாதாந்திர நமூனாக்களை கணினியில் பதிவேற்றம்செய்ய உதவியாக, 228 வணிக வரி அலுவலகங்களில் இலவச உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா சமர்பித்த அறிக்கை வருமாறு:-

மக்களுக்கான திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதில் வணிக வரித் துறையும், பதிவுத் துறையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு உறுதுணையாக இருக்கும் இந்தத் துறைகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எனது தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. வணிகர்களின் நலனுக்காக குடும்பநல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெறாமல், உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று வணிகம் செய்யும் சிறு வணிகர்களும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாரியத்தின் தொகுப்பு நிதி 2012-ஆம் ஆண்டில் 2 கோடி ரூபாயிலிருந்து5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எங்களது தேர்தல் அறிக்கையில் ‘வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை நடைமுறைப் படுத்தும் வகையில், வணிகர் நலவாரியத்தின் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் இவ்வாரியத்தில் உறுப்பினராக உள்ள வணிகர்கள் பயன்பெறுவர்.

2. வணிக வரித் துறையின் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்டு, e- c Tax என்ற புதிய மென்பொருள் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. கணினி வசதி இல்லாத சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு எடுத்துச் செல்வோர்களது மாதாந்திர நமூனாக்களை பதிவேற்றம் செய்வதிலும், எடுத்து செல்லும் பொருட்களுக்கான படிவங்களை கணினி மூலம் பூர்த்தி செய்து அளிப்பதிலும் உள்ள சிரமங்களைக் களையும் வகையில், வணிகர்கள் தங்களது மாதாந்திர நமூனாக்களை கணினியில் பதிவேற்றம் செய்ய உதவியாக, 228 வணிக வரி அலுவலகங்களில் உதவி மையம் ஏற்படுத்தப்படும். இச்சேவைக்கு என வணிகர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

மேலும் வணிக வரித் துறையின் புதிய இணையதள சேவைக்கு பதிவு செய்தல், புதிய பதிவுச் சான்று பெறுதல், வங்கிகளில் வரி செலுத்துவதற்குரிய மின் செலுத்து கைச்சீட்டினை பதிவிறக்கம் செய்தல் மற்றும் துறையின் படிவங்களை பதிவிறக்கம் செய்தல் போன்ற சேவைகளை தமிழ் நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நிந்வகிக்கப்பட்டு வருகின்ற 486 அரசு மின்-சேவை மையங்கள் மூலம் உரிய கட்டணங்கள் செலுத்தி பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

3. பணியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு கூடுதல் வசதி செய்திடவும், பணி செய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கிடவும், சொந்த கட்டிடங்கள் தேவை என்பதைக் கருத்திற் கொண்டு, கடந்த 5 ஆண்டுகளில் 64 அலுவலகங்களை உள்ளடக்கிய 33 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் பழனி ஆகிய 3 இடங்களிலும் 6 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில், 9 வணிகவரி அலுவலகங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வணிகவரிக் கட்டிடங்கள் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்