முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 19 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காவிரி தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது. மேலும், தமிழகத்துக்கு கர்நாடகம் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை மீண்டும் உறுதி செய்தது.

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து விளக்கம் கேட்டு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது குறித்த தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. எனினும், நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவின்படி, கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

காவிரி நடுவர்மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை எப்படி செயல்படுத்துவது என்பது உள்ளிட்ட விளக்கங்கள் கேட்டு தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநில அரசுகளின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில், இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது குறித்து கடந்த 2 நாட்களாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சேகர் நாப்தே, நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடப்பது மாநில அரசுகளின் கடமை என்றும், ஆனால் கர்நாடக அரசு நடுவர்மன்ற தீர்ப்பை மதிக்காமல் நடந்துகொள்வதாகவும் குறிப்பிட்டார். நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் வாதிட்டார். ஆனால், நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றம் மூலமாகத்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும், சுப்ரீம் கோர்ட் இதில் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

எனினும், நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, கர்நாடகா தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உறுதி செய்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்