முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெய்யாற்றில் இருந்து தண்ணீரை கேரளா உடனே திறந்துவிட கோரி தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கேரள மாநில அரசு, தமிழகத்திற்கு நெய்யாற்றில் விநாடிக்கு 150 கனஅடி தண்ணீரை திறந்துவிடக்கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசராணை அடுத்த மாதம் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் நெய்யாற்றில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை, திறந்துவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை விநாடிக்கு 150 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கேரளாவுக்கு உத்தரவிடக் கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், கேரள அரசு தண்ணீர் திறந்து விடாததால், கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கேரள அரசு கடந்த 2004-ம் ஆண்டு வரைதான் நெய்யாற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதாகவும், அதன் பின்னர் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. நெய்யாறு, கேரள மாநிலத்துக்கு மட்டுமே உட்பட்டது என அம்மாநில அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றும், இருமாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறு என்பதால், தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை இருமாநில அரசுகளும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்