முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை இல்லை - பொன் .ராதா கிருஷ்ணன்

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில் :  காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஸ்டாலினுக்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.மேலும் காவிரி விவகாரத்தில் தி.மு.கவும் காங்கிரசும் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரி விவகாரத்தை  அரசியல் உள்நோக்கத்தோடு, தி.மு.க. கையிலெடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையில் தி.மு.க.விற்குதான் அக்கறை உள்ளது என்பதைப் போல தி.மு.க. காட்டிக்கொள்ள முயல்கிறது. ஆனால், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது முதல் பல்வேறு சட்டபோராட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை தமிழக மக்கள் மறக்க த்தயாராக இல்லை . இந்த நிலையில் , காவிரி விவகாரத்தில் வரும் 25ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்துக்கட்சிகளுக்கும் விவசாய சங்கங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனிடையே, மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் தி.மு.கவை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது,

காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தி.மு.கவிற்கு தார்மீக உரிமை இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்ததே காங்கிரசும், தி.மு.கவும் தான். இவர்களோடு சேர்ந்து போராடினால் அது குழப்பத்தையே ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். இதே கருத்தை  பா.ஜ.க மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனும் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில், ஸ்டாலின் கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி  என்று அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்