முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது : தமிழக அரசு விளக்கம்

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஆதார் அட்டை பதிவுகளை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது என்றும், கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனி மற்றும் ஐஸ்ஹவுஸ் பகுதியில் அமுதம் மற்றும் கூட்டுறவு நியாயவிலைக் கடையில், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி, மாத ஒதுக்கீட்டின் அடிப்படையில், அத்தியாவசியப் பொருட்கள், சீரான முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை அமைச்சர் உறுதி செய்தார். ஆதார் அட்டை பதிவுகளை மேற்கொள்ளாத அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது என்றும், இதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். பொருட்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே, அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள் மக்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டுள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு குடும்ப அட்டைதாரர்கள் நன்றி தெரிவித்தனர்.

பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் பதிவுத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, சென்னையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், அத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்பினரின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு செயல்படுத்தி வரும் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணாக்கர்களுக்கான விடுதிகளில் சிறப்பான முறையில் பணியாற்றிய காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்