முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் கால் பந்து வீரர்கள் சென்ற விமானம் பயங்கர விபத்து : 76 பேர் பரிதாபமாக மரணம்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2016      உலகம்
Image Unavailable

மெடலின் : பிரேசிலிலிருந்து கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 81 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் கொலம்பியாவில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 76 பேர் பலியாயினர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். விமானத்தில்  72 பயணிகளும்   விமான ஊழியர்கள் 9 பேரும் இருந்தார்கள்.

இதுதொடர்பாக கொலம்பியா விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

லாமியா பொலிவியா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் 146 ரக விமானம், பிரேசிலின் சாவ் பலோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொலம்பியாவின் மெடலின் நகருக்கு திங்கட்கிழமை இரவு புறப்பட்டது. இதில் பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 72 பயணிகளும் 9 விமான ஊழியர்களும் பயணித்தனர்.

மெடலின் நகரில்  நடைபெற இருந்த கோபா சுடாமெரிக்கா கால்பந்து இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக பிரேசில் வீரர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

இந்நிலையில், கொலம்பியாவின் மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்த விமானத்தில் மின்சார கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் விமானம் வெடித்துச் சிதறியது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விமானப்படை ஹெலிகாப்டரும் அப்பகுதிக்குச் சென்றது. தேடுதல் வேட்டையின்போது 76 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.  மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானம், அப்பளம் போல நொறுங்கிய படமும் கொலம்பிய நாட்டு ஊடகங்களில் வெளியானது. அதை பார்க்கும்போது விபத்தின் கோரம் தெரிந்தது. கொலம்பிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இதுவரை 6 பேரை மட்டுமே உயிரோடு காப்பாற்ற முடிந்ததாகவும், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, விமானத்தில் பயணித்த பிறர் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. அவர்களின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

விமான விபத்து நடந்த இடத்திற்கு சாலை மார்க்கமாகவே மீட்பு வாகனங்கள் செல்ல முடிகிறது. மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டர், விமானங்கள் மூலமாக மீட்பு குழுவினரால் சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸ்கள் மூலமாகவே, காயமடைந்தோர், அருகேயுள்ள நகரங்களில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.மெடலின் நகர மேயர் கூறுகையில், நகரிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும், அவசர நிலையை எதிர்கொள்ள ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளன என்றும், பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்