முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டு விவகாரத்தில் தோல்வி,பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் : ராகுல் காந்தி -கூட்டாக பேட்டி

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  - நாட்டில் உள்ள கறுப்புபணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளை பிரதமர் மோடி செல்லாது என அறிவித்துள்ளார். ஆனால்  தற்போது கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்ற புதிய கருப்புச்சந்தை உருவாகியுள்ளது .இதனால் பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியுடன் கூட்டாக பேட்டியளித்தார்.  பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதியன்று பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் . நாட்டில் உள்ள கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு,  ஊழல் , தீவிரவாதிகளுக்கு நிதி செல்லுதல் ஆகியவற்றை தடுக்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். பிரதமரின் முடிவால் நாட்டில் உள்ள ஏழை , நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்கள்  அன்றாட வாழ்க்கை நடத்தவே பணம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். அவர்கள் பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற வங்கிகளில் நீண்ட வரிசையில் நாள் முழுவதும் காத்து கிடக்கிறார்கள். வங்கி வரிசையில் நின்ற 100 பேர் பரிதாமாக பலியாகியுள்ளனர் . எனவே அரசு தனது முடிவினை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.இந்த நிலையில் ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் டெல்லியில் நேற்று கூட்டாக பேட்டியளித்தார்கள்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது,

கறுப்பு பணத்திற்கு எதிராக அரசு எடுத்த முடிவு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. கறுப்புபணம் எண்ணிக்கை குறையவில்லை. அதற்கு பதிலாக சாதாரண , ஏழை மக்கள்தான் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அரசின் முடிவால் கறுப்புபணம் மற்றும் ஊழலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அரசின் முடிவு ஏழைகளுக்கு எதிரான தாக்குதல் ஆகும். விவசாயிகள் பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். சிறு வணிகர்கள், தொழிலாளர்கள் அனைவரும் பெரும் துயரநிலைக்கு ஆளாகியுள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நடந்த மிகப்பெரும் ஊழல்தான் பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவாகும். 50 நாட்களில் இயல்பு நிலை திரும்பும் . மக்கள் தாராளமாக பணம் பெறலாம் என பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். ஆனால், நிலமை மிக மோசமாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,
 பிரதமர் மோடியின் அறிவிப்பால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் இன்னும் வங்கிகளில் நாள் முழுவதும் வெயிலில் காத்து கிடக்கிறார்கள். அவர்கள் நிலமை மிக மோசமாகவே உள்ளது. 50 நாட்களில் பிரச்சினை சரியாகும். மக்கள் அனைவருக்கும் தாராளமாக பணம் கிடைக்கும் என மோடி அறிவித்திருந்தார். ஆனால் தற்போது நிலமை மிக மோசமாகவே இருக்கிறது. எனவே பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்வாரா? பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அரசின் அறிவிப்பு சட்டவிரோதமானது. அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த முடிவால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பொருளாதார நிலைமைக்கு இந்தியா பின் தங்கியுள்ளது. நிலமை தற்போதும் மிக மோசமாக நீடிப்பதால்,  பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார்? தற்போது 47 நாட்கள் ஆகி விட்டன. இன்னும் 3 நாட்களில் என்ன நடக்கப்போகிறது? என்பதற்காக காத்திருக்கிறோம். ரூபாய் நோட்டு விவகாரத்தில்  தோல்வியை தழுவிய பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்