இந்தியப் பொருளாதாரம் மேம்பாடு அடைய நுகர்வோர் அனைவரும் மின்னணு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் : கலெக்டர் சு.கணேஷ், அறிவுறுத்தல்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தலைமையில் நேற்று (28.12.2016) நடைபெற்றது.

 

பரிசு

 

இந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

நுகர்வோர் என்பவர் பொருட்கள் அல்லது சேவைகளை விலை மற்றும் வாக்குறுதி கொடுத்து வாங்குபவர் ஆவர். நுகர்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ஆம் நாள் தேசிய நுகர்வோர் தினமும், மார்ச் 15 - ஆம் நாள் உலக நுகர்வோர் உரிமை தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நேற்று (28.12.2016) தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடையே நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

ஆணையம்

 

நுகர்வோர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் அல்லது மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தினை அணுகலாம். இதில் நுகர்வோருக்கு வாதாட வழக்கறிஞர் தேவையில்லை நாமே வாதாடலாம், எளிய வழக்காடு முறைகள் பதிவுதபாலில் புகாரை அனுப்புதல் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. மேலும் நுகர்வோர் தங்கள் குறைகள் குறித்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுத்தலைரான மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ரசீதுகளுடன் புகார் அனுப்பி தீர்வு பெறலாம். மேற்கண்ட வழிகளில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற வேண்டும். எனவே அனைத்து நுகர்வோர்களும் தாங்கள் வாங்கும் பொருட்களின் தரம், எடையளவு, சரியான விலை போன்றவற்றை கருத்தில் கொண்டு வாங்குவதுடன் ஆடம்பர நுகர்வை தவிர்த்து தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை முறையாக பயன்படுத்தி நுகர்வோர் நலனை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடைய நுகர்வோர் அனைவரும் பாதுகாப்பான மின்னணு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் க.பஞ்சவர்ணம், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் சு.சதீஷ்குமார், வட்டாட்சியர்கள் ரேணுகாதேவி, கமலக்கண்ணன் உள்ளிட்ட பல்வேறு வட்டாட்சியர்கள், மாவட்ட நுகர்வோர் குழுத்தலைவர் சு.தனவேலு, பொதுச்செயலாளர் வேலவேந்தன், நுகர்வோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: