கோபி ஈரோடு மாவட்டத்தில் விவசாய வருமானம் பெருக 22 அம்மா பண்ணை மகளிர் குழுக்கள் தொடக்கம் ‚

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      ஈரோடு
af

ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் , விவசாய வருமானம் பெருகவும் ,  வேளாண் சார்பு தொழில் நுட்பங்கள் பரவவும் 22 அம்மா பண்ணை மகளிர் குழுக்கள் தொடங்கப் பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் இராம.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

                          வேளாண்மைத்துறை சார்பில் நம்பியூரில் நடைபெற்ற  அம்மா பண்ணை மகளிர் குழுக்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அவர் மேலும் பேசியவதாவது.

                          ‘ஈரோடு மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத மழைப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 857 மி.மீ மழை பெய்திருந்தது. இந்த ஆண்டில் இது வரை 309 மி.மீ அதாவது 30 சதவீதம் மட்டும் பெற்றுள்ளது. இதனால் கடும் வறட்சி நிலவும் சூழ்நிலையில் சொட்டுநீர்ப்பாசனம் , தெளிப்புநீர்ப் பாசனம் ஆகிய முறைகள் நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்கின்றன. மேலும் வறண்டு வரும் பயிர்களைக் காப்பாற்றவும் உதவுகிறது. நுண்ணீர்ப்பாசனம் அமைக்க சிறு , குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும் , 5  ஏக்கருக்கும் கூடுதலாக வைத்திருக்கும் பெரிய விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்கப்படுவதால் விவசாயிகள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

                          பெண் விவசாயிகளிடம் குழு மனப்பான்மையை வளர்த்தல் ,  சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல் , நவீன தொழில்நுட்பங்கள்  மூலம் மகசூலை அதிகரித்தல் ,  விவசாய வருமானத்தைக் கூட்டுதல் - போன்ற காரணங்களுக்காக அம்மா பண்ணை மகளிர் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும்  இக்குழு உறுப்பினர்களுக்கு வேளாண் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. 15 பேர் அடங்கிய ஒவ்வொறு மகளிர் குழுவிற்கும் , வேளாண் சார்ந்த தொழில்கள்  தொடங்க  உரிய நிபுணர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. அம்மா பண்ணை மகளிர் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். துறை சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள் , மற்றும் பயிற்சிகளில் குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் விவசாயிகள் மாற்று சிந்தனைகள் மூலம் , புதிய தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து வாழ்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் விவசாயத்தில் ஏற்படும் இடர்களை சமாளிக்கலாம் “ – என்று பேசினார்.

                          முன்னதாக பயிற்சிக்கு வருகை தந்தோரை நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி வரவேற்றுப் பேசினார்.

                          நம்பியூர் கால்நடை உதவி மருத்துவர்கள் , பிரபு , பார்வதி ஆகியோர் நவீன முறைகளில் மாடு வளர்ப்பு , நாட்டுக்கோழி வளர்ப்பு , கால்நடைகளுக்கு அடர்தீவனம் தயாரித்தல் குறித்தும் , கால்நடை மருத்துவர் ஜெயப்பிரதா  பரண்மேல் ஆடுவளர்ப்பு குறித்தும் விரிவான  வகுப்புகள் நடத்தினர். நம்பியூர் ஊராட்சி ஒன்றிய மகளிர்திட்ட  ஒருங்கிணைப்பாளர்கள் , இந்திராணி , காந்திமதி ஆகியோர் மகளிர் குழுவின் செயல்பாடுகள் மற்றும் பதிவேடுகள் பராமரிப்பது குறித்துப் பயிற்சியளித்தனர்.  திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரிப் இணைப் பேராசிரியர் முனைவர்.அனுராதா  மதிப்புக் கூட்டும் உணவுப்பொருள்கள் தயாரிக்கும் முறைகளை விரிவாக எடுத்துக்கூறினார்.

நம்பியூர் „அட்மா… திட்ட உழவர் ஆலோசனைக் குழுத் தலைவர் பெருமாள் (எ) மணி முன்னிலை வகித்துப் பேசினார்.

          இப்பயிற்சியில் ந.வெள்ளாளபாளையம் , பெரியசெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த  அம்மா பண்ணை மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் உழவர் நண்பர்கள் , முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார தொழில் நுட்ப மேலாளர் கங்கா நன்றி கூறினார்.

          பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மணிகண்டன் ,அருண்குமார் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் சரவணக்குமார் ,ஜனரஞ்சனி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு பதிவேடுகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்: