மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை : மத்திய அரசு திடீர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      தமிழகம்
central government(N)

சென்னை  - மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை நீடிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

பட்டியலில் நீக்கம்
மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கொதித்துப்போய் கிடக்கும் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதாக வெளியான இந்த தகவல் தமிழர்களை மேலும் கொந்தளிக்க வைத்தது.

முதல்வர் வலியுறுத்தல்
மத்திய அரசின் இந்த திடீர் முடிவை எதிர்த்தும், கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை தொடர்ந்து இடம்பெற வேண்டும் எனக் கோரியும் தமிழ்நாடு முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் இதையே வலியுறுத்தி உள்ளார். மேலும், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டன.


தசரா விடுமுறை ரத்து
வழக்கம் போல் பொங்கல் பண்டிகைக்கு கட்டாய அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை தொடர்ந்து இடம்பெறும் என்றும், அதற்கு பதிலாக வரும் 28-ந்தேதி தசரா விடுமுறை ரத்து செய்யப்படும் எனவும் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: