ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக்கோரி

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      நீலகிரி
19ooty-2

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்ககோரி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் செய்தனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று நாட்களாக மாணவர்களும் களத்தில் இறங்கி அறவழியில் போராடி வருகின்றனர்.

                           தர்ணா போராட்டம்

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஊட்டியருகேயுள்ள கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கல்லூரி மைதானத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக நீலகிரி மாவட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

                 வகுப்புகள் புறக்கணிப்பு

நேற்று காலையில் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதேபோன்று ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரி மாணவ, மாணவியர்கள், பிங்கர்போஸ்டில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரி மாணவியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ,மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். அதன்பின்னர் அனைத்து கல்லூரி மாணவர்களும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஒருங்கிணைந்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு கலைக்கல்லூரி, எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி அளிக்கக்கோரி ஊட்டி பத்திரிகையாளர்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

                                 கடைகள் அடைப்பு

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊட்டியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் மார்க்கெட் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று நகரில் ஆட்டோக்கள், வாடகை வாகனங்களும் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஜல்லிக்கட்டு அனுமதி அளிக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: